சீனியர்களுக்கு 'கல்தா'.. அண்ணாமலையின் 'குழு' கேம்!

சீனியர்களுக்கு கல்தா.. அண்ணாமலையின் குழு கேம்!
X
அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க பா.ஜ.க., ஆறு பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க-வின் தேசிய தலைமை.

தேசிய செயற்குழு உறுப்பினரும், கமலாலய சீனியருமான ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஒருங்கிணைப்புக் குழுவில், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், இராம ஶ்ரீனிவாசன், கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

லண்டன் சென்றிருக்கும் அண்ணாமலை, நவம்பர் மாதம் தான் தமிழகம் திரும்பவுள்ளார். அதுவரையில், கட்சிப் பணிகளை இந்தக் குழு தான் வழி நடத்தவிருக்கிறது. அதில் தான் சிக்கல் வெடித்து, சர்ச்சையை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க., முக்கியஸ்தர்கள்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர்கள் சிலர், பேசும் போது, "தொடக்கத்திலிருந்தே, இப்படியொரு ஒருங்கிணைப்புக்குழுவே வேண்டாமென்று தான் அண்ணாமலை சொல்லி வந்தார். 'அண்ணாமலை ஊரில் இல்லாத நாட்களில் கட்சியை வழிநடத்த செயல் தலைவரை நியமனம் செய்ய வேண்டும்' என சீனியர்கள் சிலர் டெல்லிக்குப் படையெடுத்த போது, அதற்கும் முட்டுக்கட்டைப் போட்டார் அண்ணாமலை. 'வீடியோ கான்பிரன்ஸ் மூலமாகவே கட்சிப் பணிகளைப் பார்த்துக் கொள்வேன். செயல் தலைவரும் தேவையில்லை, ஒருங்கிணைப்புக் குழுவும் தேவையில்லை' என்பதே அண்ணாமலையின் பதிலாக இருந்தது. ஆனால், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் உள்ளதால், ஒருங்கிணைப்புக்குழு அவசியம் என்பதை டெல்லி மேலிடம் உணர்ந்தது.

ஒருங்கிணைப்புக்குழுவில் இடம்பெற முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், சீனியர்களான நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன், கே.பி.ராமலிங்கம், எம்.என்.ராஜா என சுமார் ஒரு டஜன் பேர் முயன்றனர். குழு அமைப்பது தொடர்பாக அண்ணாமலையுடனும் டெல்லி மேலிடம் கலந்தாலோசித்தது.

அதன் பிறகு தான், ஹெச்.ராஜா தலைமையில் ஆறுபேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார் ஹெச்.ராஜா. அந்தளவில் அவருக்கு மகிழ்ச்சி தான் என்றாலும், இந்தக் குழுவால் கட்சிக்கு என்ன பயன் என்பது தான் விவாதமாகி இருக்கிறது.

ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கும் ஹெ.ராஜாவுக்கும் கனகசபாபதிக்கும் ஏழாம் பொருத்தம் தான். எஸ்.ஆர்.சேகரும் கனகசபாபதியும் பெரிதாகப் பேசிக் கொள்வதில்லை. முருகானந்தம் யாருடனும் பேசுவதில்லை. இப்படி எதிரும் புதிருமாக இருப்பவர்களை தான், அண்ணாமலையின் ஆலோசனையின் பெயரில் ஒருங்கிணைப்புக்குழுவில் போட்டிருக்கிறது கட்சித் தலைமை. 2021 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில், தேர்தல் அறிக்கையை தயார் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஹெச்.ராஜா, கனகசபாபதி உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.

அப்போதே, இருவருக்கும் இடையே பல அமர்வுகளில் கருத்து மோதல்கள் எழுந்தன. குழுக்குள் இருப்பவர்களே கருத்து மோதலில் ஈடுபட்டால், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலை யார் தடுப்பார்கள்...? ஆனால், அதைத்தான் அண்ணாமலை விரும்பியிருக்கிறார்.

தான் ஊரில் இல்லாதபோது, தன்னுடைய அதிகாரத்திற்குப் போட்டியாக யாரும் எழுந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், இப்படியொரு குழப்பமான குழுவை நியமிக்க வைத்திருக்கிறார். இந்தக் குழு, மாநில மையக் குழுவுடன் கலந்தாலோசித்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மையக்குழுவே கட்சியை வழிநடத்திவிடலாமே..? தனியாக எதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு..? மையக்குழுவில் தமிழிசை செளந்திரராஜன், பொன்னார், நயினார் நாகேந்திரன், எல்.முருகன் என தன் கைக்குள் அடங்காத சீனியர்கள் இருப்பதால் தான், ஒருங்கிணைப்புக்குழுவுக்கு ஓகே சொல்லியிருக்கிறார் அண்ணாமலை.

அந்த ஒருங்கிணைப்புக்குழுவில், ஒரு பெண்கூட இடம்பெறாததும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. தவிர, தங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காததால், தமிழிசை செளந்திரராஜனும் நயினார் நாகேந்திரனும் கடும் அப்செட் ஆகி விட்டார்கள். குழு அமைக்கப்பட்டதற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தாலும், கோவைக்கு வந்திருந்த தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார் தமிழிசை" என்றனர்.

மாவட்டத் தலைவர்கள் சிலர் இப்படியொரு விஷயத்தைக் கூறினாலும், "கட்சிக்குள் நிலவும் பூசலை பெரிதாக்கி குளிர்காய சிலர் முயற்சிக்கிறார்கள். ஒருங்கிணைப்புகுழுவில் இருப்பவர்களுக்கு இடையே எந்த கருத்து மோதலும் இல்லை. அண்ணாமலையுடன் கலந்தாலோசித்து, கட்சி வளர்ச்சிக்காக அவர்கள் செயல்படுவார்கள்" என்கிறார்கள் அண்ணாமலைக்கு நெருக்கமானவர்கள்.

வரும் செப்டம்பர் 1-ம் தேதி, தன்னுடைய கட்சி உறுப்பினர் அட்டையை புதிப்பித்து, முதல் உறுப்பினராக மீண்டும் கட்சியில் இணையவிருக்கிறார் பிரதமர் மோடி. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 4-ம் தேதி தமிழகம் முழுவதும் கட்சி உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் நடைபெறவுள்ளன. அதையெல்லாம், ஹெச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக்குழுதான் ஒருங்கிணைக்கவுள்ளது. இந்தமுறை ஒருகோடி பேரை கட்சிக்குள் இணைக்க டார்க்கெட் அமைத்திருக்கிறது டெல்லி மேலிடம். அதற்காக, 'ஒவ்வொரு கட்சி நிர்வாகியும் தலா 50 பேரை கட்சிக்குள் இணைக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்தப் பணிகளையெல்லாம் ஹெச்.ராஜா தலைமையிலான குழுதான் மேற்பார்வை செய்யும் என்கிறார்கள் பா.ஜ.க.,வினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!