உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்தவர் சரண்

உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்தவர் சரண்
X

கொலை செய்யப்பட்ட வெண்ணிலா

உளுந்துார்பேட்டை அருகே, குடிபோதையில் பெண்ணை கொலை செய்த கூலித் தொழிலாளி காவல்துறையிடம் சரணடைந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரியபட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 40; இவரது மனைவி வெண்ணிலா, 35; கட்டட கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் பண்ருட்டியில் கட்டட பணிக்கு சென்றிருந்த அவர், வேலை முடிந்து பஸ்சில் வீடு திரும்பினார். தேவியானந்தல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, கணவர் கணபதிக்கு போன் செய்து, பைக்கில் வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி கூறியவர், கணவர் வரும் வரை காத்திருக்காமல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுளாப்பட்டு அருகே வெண்ணிலாவை பின் தொடர்ந்து வந்த நபர், திடீரென கட்டிப்பிடித்தார்.

வெண்ணிலா கூச்சலிட்டதும் அவரை சாலையோரம் தேங்கியிருந்த மழை நீரில் தள்ளி, தலையை தண்ணீரில் வைத்து அழுத்தியுள்ளார். அதற்குள் அங்கிருந்தவர்கள் ஓடிவந்ததும், அந்த நபர் தப்பியோடினார். இதற்கிடையே கணபதி சம்பவ இடத்திற்கு வந்து விட, அப்பகுதி மக்கள் உதவியுடன் மயங்கிய நிலையில் கிடந்த வெண்ணிலாவை மீட்டு, திருநாவலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று 11:50 மணியளவில் வெண்ணிலாவை கொலை செய்த கொலையாளியை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் பண்ருட்டி - திருநாவலுார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., மணிமொழியன், திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மதியம் 2:00 மணியளவில் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே, திருநாவலுார் போலீஸ் நிலையத்தில் வெண்ணிலாவை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சரணடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், இரவு போதையில் இருந்ததால், வெண்ணிலாவை சபலத்தில் நெருங்கியதாகவும், அவர் கூச்சலிட்டதால் கீழே தள்ளி தண்ணீரில் தலையை அழுத்தி கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார். ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!