பெண்ணுக்கு வீட்டுமனை பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி..!
இருபத்தி நான்கு ஆண்டுகள் அலைந்த பெண்ணுக்கு பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி ஜெயந்தி.
வீட்டுக்காக அலைந்த பெண்ணுக்கு ஒரு நீதிபதியே நேரடியாகச் சென்று வீட்டுமனைப்பத்திரம் வாங்கிக்கொடுத்த நீதிபதியின் செயல் சமூக வலைதளங்களில் போட்டோ, பெயர் விவரங்களுடன் வெளியாகி வைரலாகி வரும் பதிவினை நமது வாசகர்களுக்கு அப்படியே வழங்குகிறோம்.
புரசைவாக்கம் சிவசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் எல்லையம்மாள் (வயது 53). இவருக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கான பத்திரத்தைப் பெற ஓராண்டு ஈராண்டுகள் போராடவில்லை 1993-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் உரிமையாளர் பத்திரம் கேட்டு குடிசை மாற்று வாரியத்துக்கு நடையாய் நடந்தார், எல்லையம்மாள்.
மனம் நொந்துபோன எல்லையம்மாள் சென்னை சட்ட உதவி மையத்தை நாடி மனு அளித்தார். எல்லையம்மாளின் மனுவைப் படித்த நீதிபதி ஜெயந்தி வியப்படைந்தார். பத்திரம், பட்டா பெற ஒரு மனுஷி 24 ஆண்டுகள் போராடிக் கொண்டிருக்கிறாரா என அவருக்குள் ஆற்றாமை ஏற்பட்டது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு போன்செய்து உடனடியாக ஆவணங்களைத் தயார் செய்து எல்லையம்மாளுக்கு வழங்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவுக்கும் பலனில்லாமல் எல்லையம்மாள் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டார்.
நீதிபதியிடம் எல்லையம்மாள் மீண்டும் முறையிட இந்த முறை நீதிபதி ஜெயந்தி அவருடன் சேர்ந்து ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்குச் சென்றார். அங்கிருந்த அலுவலர்களை லெப்ட் ரைட் வாங்கினார் நீதிபதியின் கோபத்தைக் கண்டு மிரண்டு போன அலுவலர்கள் தீயாய் வேலை பார்த்தனர். சுமார் 2 மணி நேரத்தில் எல்லையம்மாளுக்கு வீட்டு உரிமையாளருக்கான பத்திரம் வழங்கப்பட்டது.
தன்னுடன் ஆட்டோவில் குடிசை மாற்று வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக வந்து பத்திரம் வாங்கிக் கொடுத்த நீதிபதி ஜெயந்திக்கு எல்லையம்மாள் கண்ணீர் மல்க நன்றி சொன்னார். எல்லையம்மாளின் அதிர்ஷ்டம் நான்கு மாதத்துக்கு முன்பு தான் நீதிபதி ஜெயந்தி இங்கு பணி மாற்றலாகி வந்திருந்தார்கள்.
லஞ்சமில்லாமல் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் வேலை நடக்காது. இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் கோர்ட் போனாத்தான் வேலை நடக்கும்கிறது வெக்கக்கேடான விசயம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. நீதிபதி ஜெயந்தி அவர்களுக்கு பணிவான வணக்கங்களுடன் வாழ்த்துவோம்.
படித்தோம் பகிர்ந்தோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu