தமிழருக்காக சொத்து விற்று தனது குடும்பத்தை தவிக்க விட்ட பென்னிகுவிக்
கர்னல் பென்னிகுவிக்
முல்லை பெரியாறு அணை கட்டுவதற்காக தனது சொத்துக்களை செலவிட்டு விட்டு, தனது சொந்த குடும்ப வறுமை நிலையில் இருந்தும் தமிழர் நலனை பற்றியே சிந்தித்த, தியாகி கர்னல் பென்னிகுவிக் பிறந்தநாள் இன்று . அதனால் தான் அவரை, மனித கடவுளாக வணங்குகிறோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: கடந்த 1876ம் ஆண்டு முதல் 78ம் ஆண்டு வரை மதராஸ் மாகாணம் பெரும் பஞ்சத்தில் சிக்கியது. பல லட்சம் மக்கள் பஞ்சத்தில் இறந்தனர். பருவமழை இல்லாமல் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது கடல் மட்டத்தில் இருந்து 2890 அடி உயரத்தில் அரபிக்கடலை நோக்கி சென்று கொண்டிருந்த முல்லை பெரியாறை அணை கட்டி, தடுத்து நிறுத்தி, மலையை குடைந்து நீர்வழிப்பாதை அமைத்து, தண்ணீரை தேனி மாவட்டத்தின் பக்கம் திருப்பினார், ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்.
சுருக்கி, போர்ட்லாண்ட் சிமெண்ட் கலந்து 'எடை ஈர்ப்பு அணை' தத்துவத்தின் கீழ் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் போது, 483 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கர்னல் ஜான் பென்னிகுவிக், பிரிட்டனில் இருந்த தனது சொத்துக்களை விற்று அந்த பணத்தை அணை கட்டுமான பணிகளுக்கு செலவிட்டார்.
இவரது துணைவியார் கிரேஸ்ஜார்ஜியானா. இவர்களுக்கு ஐந்து பெண்கள், ஒரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்த அணை கட்ட மொத்தம் 75 லட்சம் ரூபாய் செலவானது. இந்த அணை கட்ட பிரிட்டனில் இருந்த தனது சொத்துக்களை கர்னல்ஜான் பென்னிகுவிக் விற்றதால், இவரது குடும்பம் வறுமையில் வாடியது. இவர் பெற்ற மூன்று பெண்களுக்கு திருமணம் கூட செய்து வைக்க வழியில்லாமல், அவர்கள் மணம் முடிக்காமலேயே மரணித்தனர். அவருடைய ஒரே மகனும் பிழைப்பிற்காக ஜெர்மன் சென்று, அங்கு ஜெர்மானிய பெண்ணை திருமணம் செய்து வாழ்க்கையை கழித்திருக்கிறார்.
அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தமிழர்கள் மீசை வைத்திருந்தனர். இதனால் கர்னல் ஜான் பென்னிகுவிக் தானும் மீசை வளர்த்துக் கொண்டார். கடும் போராட்டத்திற்கு பின்னர், அணை கட்டிய பென்னிகுவிக் 1895ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தார். இப்படி தனது குடும்பத்தையே வறுமையில் தள்ளி தமிழர்களுக்கு வாழ்வு கொடுத்ததால் தான், அவரது உருவ படத்தை தமிழர்கள் வீடு தோறும் வைத்து, வாழ்ந்த மனித கடவுளாகவே வழிபட்டு வருகின்றனர். ஜனவரி 15ம் தேதி அவரது பிறந்தநாளில் அவரின் செயல்களை நினைவு கூர்ந்து அவருக்கு நன்றி தெரிவிப்பதை கடமயைாகவே கொண்டுள்ளோம். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu