மின் இணைப்புகளுக்கு செக்: ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்
மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு
மின் இணைப்பு எண்களுடன், நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைக்க வசதி செய்து கொடுத்துள்ளது.
இந்த நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர், அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்று அச்சத்தில் உள்ளனர். இதில் மக்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. மின்சார மானியம் பெறுவதற்கு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமாகிறது என்பதே அதற்குக் காரணம்.
ஆனால், அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர்களும், அனைத்து மின் இணைப்புகளுக்கு ஒரே தொலைபேசி எண்ணைத்தான் இணைத்துள்ளனர். இந்த நிலையில், நுகர்வோர், தங்கள் மின் இணைப்புகளுடன் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம். இதில் எந்த சிக்கலும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடகை வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களும், தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கவும் மின் வாரிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடகைக்கு குடியிருப்பவர்களும், மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில், ஆதார் எண்ணை இணைக்க மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் சிறப்பு வசதி செய்துள்ளது. மேலும், https://adhar.tnebltd.org/adharupload/ என்ற பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்துச் சென்று, மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலைக் கொடுத்து ஆதார் எண்ணையும் இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி, மக்கள், 100 யூனிட் மின்சார மானியத்தைப் பெற, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்திருந்தது. அதே வேளையில் ஆதார் எண் இணைக்காதவர்களுக்கு மானியம் நிறுத்தப்படாது என்றும் அறிவித்திருந்தது.
இப்போது சிக்கல் என்னவென்றால், ஒரே நபர், பல மின் இணைப்புகளை வைத்திருப்பார். அவர் அத்தனை மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை மட்டும் தான் கொடுத்துள்ளார். ஒரு ஆதார் எண்ணுக்கு ஒரே ஒரு மின் இணைப்பிற்கு மட்டும் தான் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்க முடியும். மற்ற இணைப்புகளுக்கு வழங்க முடியாது என அரசு கூறி விட்டால், அதாவது ஒரே நபருக்கு பல மின் இணைப்புகளுக்கு மாதம் 100 யூனிட் மின்சாரம் வழங்க முடியாது என கூறி விட்டால் என்ன ஆகும் என பலரும் அச்சத்தில் உள்ளனர். ஆனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தாரளமாக தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu