எடப்பாடியுடன் சேர்ந்து மோடியை ஏமாற்றுகிறாரா அண்ணாமலை..?
பாஜ தமிழக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பாஜக தலைவர் அண்ணாமலை ஓ.பன்னீர்செல்வத்தை அவமதித்துவிட்டதாக சிவகங்கையில் அவரது ஆதரவாளர்கள் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டித்துள்ளனர். அதிமுக - பாஜக இடையிலான உறவில் விஷம் கலப்பதாக குற்றம்சாட்டி உள்ள அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை சந்தித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அண்ணாமலை திரும்பப்பெற கோரியதற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பாஜக தரப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானதாக அறியப்பட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கும் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதும், அண்ணாமலைக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், ‘’இரட்டை இலை முடக்கப்படுவதற்கு தான் காரணமாக இருக்கக்கூடாது எனக் கருதி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் முறையிடாமல் ஒதுங்கியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அக்கிரமத்தோடு செயல்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்துள்ளார் ஓபிஎஸ். வேட்பாளர் தேர்வில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாஜக தேர்தலில் போட்டியிட்டால் ஓபிஎஸ் பாஜகவை ஆதரிப்போம் எனச் சொன்னார். அதற்கு காரணம் இருக்கிறது. பாஜக போட்டியிட்டால் எடப்பாடி பழனிசாமியும் அவர்களை ஆதரிப்பார். டி.டி.வி.தினகரனும் அவர்களை ஆதரிப்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது காங்கிரஸ். எனவே பாஜக எதிர்த்து போட்டியிட்டால் 2024 தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதை கருதியே ஓபிஎஸ் அப்படிச் சொன்னார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள பிளவில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த பாஜக உளமார முயற்சி செய்கிறது. பாஜகவின் அந்த எண்ணத்தை நாங்கள் உளமார வரவேற்கிறோம். ஆனால், தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருக்கும் அண்ணாமலை தொடர்ந்து ஒருதலை சார்பாக நடந்து கொண்டு பாஜகவோடு எங்களுக்கு இருக்கும் நல்லுறவில் 'பாய்சன்' கலப்பதற்கு முயற்சிக்கிறார்.
சமீபத்தில் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான சமாதான முயற்சிகளுக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை சந்திக்கச் சென்றார். ஒருங்கிணைப்பாளர் தான் நம்பர் 1. இணை ஒருங்கிணைப்பாளர்: நம்பர் 1-ஏ. முதலில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து விட்டுத்தான் எடப்பாடியை சந்திக்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியையும் ஈபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டதால் அவர் பதவியில்லா பழனிசாமிதான். அவரைச் சந்தித்துவிட்டு வந்து, ஓபிஎஸ்ஸிடம் உங்கள் வேட்பாளரை நீங்கள் திரும்பப் பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பது எடப்பாடி பழனிசாமியின் அபகரிப்பு அரசியலுக்கு ஆதரவாக பாஜகவை கொண்டு செல்லும் வேலையை அண்ணாமலை செய்கிறாரோ என்ற ஐயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் கமலாலயத்திற்கு சென்று எங்கள் வேட்பாளர் செந்தில் முருகனுக்கு ஆதரவு கேட்டுச் சென்றபோது, அண்ணாமலை வாசல் வரை வந்து வரவேற்கவும் இல்லை. திரும்பிச் செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்பவும் இல்லை. இது விருந்தோம்பல் பண்பற்ற செயல். ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓபிஎஸ். பாஜக அலுவலகத்திற்கு முதல் முறையாக சென்ற அவரை, அந்த அலுவலகத்திலேயே இருந்த அண்ணாமலை வாசலுக்கு வந்து வரவேற்காததன் மூலமே எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை சாதகமாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திவிட்டார்..
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அதிமுக விவகாரத்தில் நடுநிலைத் தவறிசெயல்பட்டுள்ளார். ஒரு கட்சியில் நடக்கும் அண்ணன் தம்பி சண்டையில், அப்பத்தை பங்கிட்ட கதையில் நரி செய்த சூழ்ச்சி போல அண்ணாமலையின் செயல் இருப்பதை கண்டிக்கிறோம். அச்செயலின் மீது எங்களுக்கு இருக்கும் வருத்தத்தை நாங்கள் தீர்மானமாக இயற்றி இருக்கிறோம்’’என மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தன் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்கிற பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, ’’சாமியாருக்கும் சாதி பற்று உண்டென்னும்போது, அண்ணாமலைக்கு இருக்காதா? அண்ணாமலை கவுண்டரும், பழனிச்சாமி கவுண்டரும் இணைந்து நரேந்திர மோடியை ஏமாற்றப்போவது உறுதி’’ என்று போட்டு உடைக்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu