செல்வாக்குள்ளவர்களுக்கு மட்டுமே பணியிட மாறுதல்: ஊழியர்கள் குமுறல்
கோப்புப்படம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டயப் பொறியாளர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மு.மாரிமுத்து கூறியதாவது: நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம், பராமரிப்பு, திட்ட வடிவமைப்பு மற்றும் ஆய்வு, தேசிய நெடுஞ்சாலை, திட்டங்கள், நபார்டு மற்றும் கிராமச் சாலைகள், தொழிற்தட சாலை திட்டம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், நெடுஞ்சாலைகள் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சென்னை பெருநகரம் ஆகிய உட்பிரிவு துறைகள் (அலகுகள்) உள்ளன.
இதல், பணியாற்றி வரக்கூடிய உதவிக் கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் ஆகியோருக்கு பல ஆண்டுகளாக பொது பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது. செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் பணியிட மாறுதல் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் விதிப்படி, உயர் அலுவலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் அதே இடத்தில் பணிபுரிய அனுமதி வழங்கக் கூடாது. மேலும், நெடுஞ்சாலைத் துறையில் இயக்கி வரும் 12 அலகுகளில் பணியிட நிரவல் மாறி மாறி வர வேண்டும். ஆனால், ஒரே அலகுகளில் பல ஆண்டுகளாக இடத்தை மட்டும் மாற்றி, பல பொறியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இது சம்பந்தமாக அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு திசை திருப்பும் விதமாக பதில் அளிக்கப்பட்டது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையில் உதவிக்கோட்ட பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு பொது பணியிட மாறுதல் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் பொது பணியிட மாறுதல் இல்லாத பட்சத்தில், பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu