இந்தியா - அமெரிக்கா கடலோரக் காவல் படையினர் கூட்டுப் பயிற்சி
இந்தியா, அமெரிக்க கடலோரக் காவல்படையினர் கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்றது.
இந்தியா, அமெரிக்க கடலோரக் காவல்படையினர் கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்றது.
இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்றது. இதில் பல்வேறு விதமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு குறித்த செயல்விளக்க காட்சிகள் நடைபெற்றன.
இந்தியக் கடலோரக் காவல் படையினர் நட்பு நாடுகளின் கடலோரக் காவல் படையினரோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இதே போல் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க நாட்டின் மிட்ஜெட் 757 என்ற கடலோர காவல் படை கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இக்கப்பல் மற்றும் அதிகாரிகள், வீரர்கள் அடங்கிய குழுவினரை அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதனையடுத்து கடந்த மூன்று நாள்களாக இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர் இடையே பரஸ்பர கருத்து பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு, கடல்சார் விழிப்புணர்வு, இந்தோ பசிபிக் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பாதுகாப்பு, ஒழுங்காற்று உத்திகள் குறித்து கருத்தரங்கம், பயிற்சி வகுப்புகள், கைப்பந்து போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன.
நான்காம் நாளான திங்கள்கிழமை சென்னைக்கு அருகே நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மற்றும் செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மிட்ஜெட் 757 கப்பலுடன் இந்திய கடலோரக் காவல் படையின் அன்னி பெசன்ட் ரோந்துக் கப்பல், இடைமறிக்கும் படகுகள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்பட்டன.
கூட்டுப் பயிற்சியின்போது கடல் கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்படும் ஒரு கப்பலை கடல்சார் உத்திகள் மற்றும் சூழ்ச்சிகள் மூலம் கூட்டு நடவடிக்கையில் இறங்கி கப்பலை பத்திரமாக மீட்டு கடல் கொள்ளையர்களையும் கைது செய்வது, ஒருங்கிணைந்த கூட்டு தளவாடங்கள் பரிமாற்றம், தேடல் மற்றும் மீட்பு, எரியும் கப்பல் மீதான தீயணைப்பு தீயணைப்பு பணிகள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பாலன மிட்ஜெட் 757 மாலத்தீவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu