முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவி ஏற்பு

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவி ஏற்பு
X

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவி ஏற்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று (வெள்ளிக்கிழமை) எம்எல்ஏவாக பதவியேற்றார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 27-ம் தேதி நடந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிட்ட நிலையில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

இந்தநிலையில் இன்று (மார்ச்.10) வெள்ளிக்கிழமை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே, கடந்த 1984ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்துள்ளார். தற்போது, 38 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தமிழக சட்டசபைக்குள் நுழைந்துள்ளார். சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!