மக்கள் துயர் துடைக்க உடனடி நிவாரணப் பணிகள்: கட்சியினருக்கு அண்ணாமலை உத்தரவு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் சென்னையில் தற்போது மழை பெய்துள்ளதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்துள்ளன.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிக அதிகமான அளவில், கடந்த 6 ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் மக்கள் துயர் துடைக்கும் வகையிலே, நிவாரணப் பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டுகிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல், உதவிப் பொருட்கள் வழங்குதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்,
மிகப் பெரிய பிரச்சனைகள் இருப்பின், தொடர்புடைய அரசு அதிகாரிகளை அணுகி தேவையான உதவிகளை பெற்றுத் தர வேண்டுகிறேன். இப்பணிகளில் அவசர கதியில் ஈடுபட வேண்டாம்.
பொது மக்களும், ஆங்காங்கே மழை வெள்ளத்துடன், தாழ்வான பகுதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி வருவதால் மிகக் கவனமாக வெளியில் சென்று பாதுகாப்புடன் வர வேண்டும். முடிந்த அளவு, வெளியில் செல்வதை தவிர்த்திட அன்புடன் வேண்டுகிறேன்,
எவ்வித புரளிக்கும் இடம் தராமல், மக்களை அச்சத்தில் இருக்க விடாமல், அதிகார பூர்வமான தகவல்களை மட்டுமே நம்பவும். கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu