விஷச் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக், ஆட்சியாளர்களின் தொடர்புகள் விசாரிக்கப்படுமா..?

விஷச் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக்,  ஆட்சியாளர்களின் தொடர்புகள் விசாரிக்கப்படுமா..?
X

கோப்பு படம் 

விஷச் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் மது மூன்றிலும் ஆட்சியாளர்களுக்கு உள்ள தொடர்புகள் என்ன? என பார்க்கலாம்.

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் பதிவினை நம் வாசகர்களுக்கு அப்படியே தருகிறோம்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், லோக்கல் பிரமுகர்கள் அனைவரும் சேர்ந்து அரங்கேற்றிய படுகொலை அம்பலப்படுமா? மெல்லக் கொல்வது டாஸ்மாக் மது. உடனே கொல்வது விஷச் சாராயம்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்துள்ள விஷச் சாராயச் சாவுகள் நெஞ்சை உலுக்கி எடுக்கின்றன. சாவு எண்ணிக்கை 55 ஐ கடந்து சென்று கொண்டுள்ளது. இது தவிர நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் குற்றுயிரும், குலை உயிருமாய் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கண் பார்வை போனவர்கள், கல்லீரல், மண்ணீரலை காவு கொடுத்தவர்கள், சிறுகுடல், பெருங்குடல் சின்னாபின்னப்பட்டு போனவர்கள் இனி வாழ்ந்தாலும் சோகமே.

காவல் நிலையத்திற்கு பின்புறமாக – நீதிமன்றத்திற்கு 150 அடி தூரத்தில் – கலெக்டர் அலுவலகத்திற்கு ஒன்றரை கீ.மீ தூரத்தில் – இரவும், பகலுமாக 24 மணி நேர கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது! இதை கண்டும், காணாமல் அரசு நிர்வாகம் இருந்துள்ளது என்பதற்கு இதுவே அத்தாட்சி. இறந்து போனவர்களின் குடும்பப் பெண்கள் அழுகையின் போது சொல்லியது, “எத்தனையோ முறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என்பதாகும்.

இது ஏதோ ஒன்றிரண்டு இடத்தில் மட்டுமே கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என்பதல்ல, தமிழகம் முழுமையும் விரிவாக சிஸ்டமேட்டிக்காக நடந்து வருகிறது. இப்படி சிஸ்டமேட்டிக்காக நடப்பதென்றால், ஆட்சியாளர்கள் தயவின்றி இது சாத்தியமில்லை. சென்ற ஆண்டு மரக்காணத்தில் இதே போல கள்ளச்சாராயம் அருந்தி 23 பேர் உயிரிழந்த நிகழ்வை துயர் மிகுந்த எச்சரிக்கையாக அரசு உணரவில்லை. இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தந்து சமாளித்து சாதுரியமாகக் கடந்தனர்.

டாஸ்மாக் மதுவை ஏழைகள் தவிர்ப்பதேன்?

டாஸ்மாக் மதுவின் உற்பத்தி விலை 15 ரூபாய் என்றால், அதை விற்கும் விலை 120 ஆக உள்ளது. ஏழை, எளியோர் எப்படி வாங்குவார்கள்? அவர்கள் 30 ரூபாய்க்கு கிடைக்கும் கள்ளச் சாராயத்தை நாடுகிறார்கள். உலகில் எந்த ஒரு பொருளுக்கும் இவ்வளவு கொள்ளை லாபம் வைத்து விற்பதில்லை யாரும்.

ஆனால், ஒரு அரசே இந்த கொள்ளையை நடத்துகிறது. டாஸ்மாக் மதுவை வாங்க முடியாத ஏழைகளை டார்கெட் வைத்து, லோக்கல் அரசியல்வாதிகள் கள்ளச்சாராயத்திற்கு வழி வகை காண்கிறார்கள். ஆட்சியாளர்களின் அழுத்தம் இருப்பதால் அரசு நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போகிறது.

கள்ள சாராயத்தை தடுக்க காவல்துறையில் தனியாக சிறப்பு பிரிவும், அதற்குரிய அதிகாரிகளும், காவலர்களும் வெட்டிச் சம்பளம் வாங்கிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் என்றால், இது ஆட்சியாளர்களின் குற்றமே அன்றி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் தவறு மட்டும் என்பதாக குறுக்கி விட முடியாது.

கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கான ஸ்பிரிட்டை யார் தந்து கொண்டு இருக்கிறார்கள்? மெத்தனால் சப்ளை எப்படி நடக்கிறது..? கள்ளச் சாராயத்தை ஊக்குவிப்பதில் யார், யாருக்கு எத்தனை பங்குள்ளது? இவை ஒரு போதும் வெளிவரப் போவதில்லை. இலவசத் திட்டங்களை நிறைவேற்றவே டாஸ்மாக் மது விற்பனையாம்.

மதுவால் செத்த வீட்டுப் பெண்கள் ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள்! “எங்களுக்கு எந்த இலவச திட்டமும் வேண்டாம். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ருபாய் வேண்டாம். டாஸ்மாக் கடைகளை மூடுங்க போதும். கள்ளச் சாராயத்தை ஒழிங்க போதும். ஒவ்வொரு நாளும் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் எங்கள் குடும்பத் தலைவர்கள் டாஸ்மாக்கிலே இழக்கிறார்கள். அது குடும்பத்திற்கு ஒழுங்காக வந்தாலே போதும். அரசின் உதவி ஒன்றுமே வேண்டாம்” என்கிறார்கள்.

டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழகம் முழுமையுமாக அங்கும் இங்குமாக எத்தனையோ பெண்கள் போராட்டங்களை நடத்தியும், இந்த அரசு கடுகளவும் பொருட்படுத்தியதே இல்லையே. டாஸ்மாக் மதுவாலும் உயிரிழப்புகள் அதிகம் நடந்துள்ளது.

சென்ற ஆண்டு தஞ்சை டாஸ்மாக்கிலே மது வாங்கி குடித்தவுடன் இருவர் இறந்தனர். இது டாஸ்மாக் மதுவும் தரமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. அதைவிட அத்தாட்சி டாஸ்மாக் போதையால் கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் லட்சக்கணக்கில் விதவைகள் பெருகியுள்ளனர். குடும்பங்கள் நிர்கதியாகியுள்ளனர்.

ஒவ்வொரு தெருவிலும் டாஸ்மாக் மதுவுக்கு தங்கள் குடும்ப ஆண்களை பறி கொடுத்த குடும்பங்கள் நான்கைந்தேனும் உள்ளனர். இது வரை உலகில் நடந்த எந்தப் போரில் இறந்தவர்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மதுவால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம். இது குறித்து எந்த குற்றவுணர்வுமின்றி, ஆட்சி நடத்துவோர் இருக்கும் போது இந்த 55 பேர் (இனியும் அதிகரிக்கும்) இறப்பெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

எப்போதுமே திமுக ஆட்சிக்கு வந்தால் மது விற்பனையை அராஜகமாகச் செய்கிறார்கள். அரசு டாஸ்மாக்கே 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. வேலை நேரத்திற்கு பிறகு ரகசியமாக விற்கப்படும் மதுவிற்கான வரிப்பணம் அரசு வருவாய்க்கு வருவதில்லை. ஆக, டாஸ்மாக்கிலேயே கள்ள மது விற்கபடுவதாகத் தான் இதை புரிந்து கொள்ள வேண்டும். “தமிழகத்தில் பார்களுக்கு விநியோகிக்கப்படும் மதுவில் கணிசமான பங்கு சட்ட விரோதமாக அரசு நிர்வாகத்தால் விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ஆதாயம் கிடைக்கிறது”என அன்புமணி ராமதாஸ் அம்பலப்படுத்தினார்.

மத்திய பாஜக அரசாங்கம் வெறும் 100 கோடி மதுபான ஊழல் விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல் மணிஸ் சிசோடியா ஆகியோரை சிறையில் தள்ளும் போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளாக நடக்கும் டாஸ்மாக் மது மற்றும் கள்ளச் சாராய முறைகேடுகளில் பல நுாறு கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடப்பதை அறிந்தும், அறியாதது போல மத்திய பாஜக அரசு கடந்து போவதன் ரகசியம் என்ன?

மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து, விசாரணை கமிஷன் அமைத்து, முதலைமைச்சர் ஸ்டாலின் தப்ப முடியாது. சம்பந்தப்பட்ட அமைச்சரையும், தொடர்புடைய அத்தனை அரசியல்வாதிகளையும் அதிகாரத்தில் இருந்து அகற்றி வீட்டுக்கோ, சிறைக்கோ இடமாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நன்றி: சாவித்திரி கண்ணன்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!