மாநிலம் முழுவதும் அனுமதியின்றி கொடிகட்டிப்பறக்கும் மதுபான விற்பனை..!
மது (கோப்பு படம்)
மாநிலம் முழுவதும் அனுமதியின்றி மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் பல ஆயிரத்தை தாண்டுகிறது. இருப்பினும் எங்குமே அனுமதியின்றி மதுவிற்பனை செய்வது குறையவில்லை. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ‛உளவுப்பிரிவு’ போலீசார் அரசுக்கு பல்வேறு தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வந்ததால், அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில மதுபான கடைகளை மூடியது. இந்த கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட இழப்பினை சரி கட்ட தற்போது செயல்படும் டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதை ஊக்குவித்தனர்.
டாஸ்மாக் மேலாளர்களே இதற்கு சரக்குகளை சப்ளை செய்து மறைமுக உதவிகளையும் செய்தனர். இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பின்னர், குடிமகன்களுக்கு தாங்கள் குடிக்கும் இடத்திலேயே மதுபானம் கிடைக்கும் அளவிற்கு வசதியான சூழ்நிலை உருவாகி விட்டது. இதுவும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது.
இதனால் கடந்த சில மாதங்களாக அனுமதியின்றி மதுபானம் விற்பதை தடுத்து, பொதுமக்களிடம் நல்ல பெயர் எடுக்க அரசு முடிவு செய்து, போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டது. அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்களும் தங்கள் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை தான் அதிகரிக்கிறதே. அனுமதியற்ற மதுபான விற்பனை எங்குமே குறையவில்லை. இது குறித்து உளவுப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கிடைத்த தகவல்கள் அரசுக்கே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஒரு இடத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தனிநபர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தனிநபர் எங்குமே மதுவிற்பதில்லை.
மாறாக ஐந்து முதல் ஆறு பேர் கொண்ட குழுவாக விற்பனை செய்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான வேலைகளை செய்வார்கள். இந்த ஆறு பேர் குழுவிற்கு ஒரு ‛பிக்பாஸ்’ இருக்கிறார். அவர் யார் என்பது வெளியே தெரியாது. சரக்குகளை விற்க வேண்டிய இடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதும், தனது குழுவில் யாராவது போலீசில் சிக்கினால் கோர்ட்டில் 500 ரூபாய் அபராதம் கட்டி மீட்பதும் ‛பிக்பாஸ்’ வேலை.
தவிர தாங்கள் மது விற்கும் இடத்தின் சட்டம்- ஒழுங்கினை பராமரிக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தேதியில் மாமூல் கொடுப்பதும் ‛பிக்பாஸ்’ தான். இப்படி அனுமதியற்ற மது விற்பனை மூலம் மட்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் 40 ஆயிரம் ரூபாயும், எஸ்.ஐ.,க்களுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயும் வருவாய் கிடைத்து விடுகிறது. தவிர மாதந்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்கு பதிவு செய்ய ஆட்களை கொடுத்து விட வேண்டும். போலீசாரை பொறுத்தவரை மது விற்பனை செய்தவர்களை கைது செய்த கணக்கும் செட்டிலாகி விடுகிறது. வந்து சேர வேண்டிய வரவும், வந்து விடுகிறது.
ஒருவர் கைது செய்யப்பட்டாலும், அந்த குழுவில் உள்ள மீதம் ஐந்து பேர் தொடர்ந்து மது விற்பனை செய்வார்கள் எனவே அனுமதியற்ற மது விற்பனை தடைபடுவதில்லை. கைது செய்யப்பட்டவரையும் ‛பிக்பாஸ்’ உடனே வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
இவர்கள் கள்ளச்சாராயம் விற்றாலோ, அல்லது போதை மருந்து கலந்த மது விற்றாலோ மட்டுமே ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ள முடியும். இவர்கள் டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை வாங்கித்தானே கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். எனவே இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முடியாது. கிட்டத்தட்ட கஞ்சா விற்பனையும் இதே பாணியில் தான் நடந்து வருகிறது.
இதன் மூலமும் போலீஸ் அதிகாரிகளுக்கு வருவாய் கொட்டுகிறது. எனவே போலீஸ் அதிகாரிகள் வாங்குவதை நிறுத்த விட்டால், மது விற்பனை செய்பவர்கள் போலீசாரை எதிர்த்து விற்பனை செய்ய முடியாது. எனவே இந்த தொழிலில் இருந்து விலகி விடுவார்கள். தமிழகத்தில் ஓரிரு ஸ்டேஷன் லிமிட்களில் லஞ்சம் வாங்காத போலீஸ் அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
அங்கெல்லாம் அனுமதியற்ற மது விற்பனையோ அல்லது கஞ்சா விற்பனையோ இல்லை. எனவே ‛போலீஸ் அதிகாரிகள்’ வாங்குவதை நிறுத்தி விட்டால், மது, கஞ்சா விற்பனை தானாக நின்று விடும். இவ்வாறு அறிக்கை அனுப்பி உள்ளனர். இதனை படித்த போலீஸ் உயர் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu