மத்திய அமைச்சராகிறார் இளையராஜா- பலிக்குமா? பா.ஜ.வின் திட்டம்

மத்திய அமைச்சராகிறார் இளையராஜா-  பலிக்குமா? பா.ஜ.வின் திட்டம்
X
நியமன எம்.பி.,யாக பதவி ஏற்ற இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க பா.ஜ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பா.ஜ.க, எப்போது என்ன செய்யும் என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது. யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென இசைஞானி இளையராஜாவை நியமன எம்.பி.,யாக்கி உள்ளது. இவர் பதவியேற்ற போது, 'கடவுளின் அருளால்' எனக்கூறி பதவியேற்றார். இந்த 'கடவுளின் அருளால்' என்ற வார்த்தையை அவர் அழுத்தமாக உச்சரித்த விதம், அப்போது அவர் காட்டிய உடல்மொழி ஒட்டுமொத்த இந்துக்களையும் கட்டிப்போட்டு விட்டது.

ஜனாதிபதி பொறுப்பேற்ற வீடியோவை விட, இளையராஜா பொறுப்பேற்ற வீடியோ தான் தமிழகத்தில் பல மடங்கு அதிகளவில் வைரலானது. இதனையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்துள்ளது. ஏற்கனவே இளையராஜாவுக்கு தமிழகத்தில் மிகப்பெரிய (கோடிக்கணக்கான) ரசிகர் கூட்டம் உண்டு. ஜாதிப்பெயரை சொல்லி எந்த ரசிகரிடம் இருந்தும் இளையராஜாவை பிரிக்கவே முடியாது என்பது உலகறிந்த உண்மை. இசையும், இளையராஜாவும் எப்படி இணைந்துள்ளனரோ, அதேபோல் இளையராஜாவும் அவரது ரசிகர்களும் ஒருங்கிணைந்துள்ளனர்.

அதுவும் தேசிய தலைவரான முன்னாள் தமிழக முதல்வர் காமராஜர் பற்றி எடுக்கப்பட்ட படத்திற்கு அவர் பணம் வாங்காமல் இசையமைத்தது, திராவிடம், கடவுள் மறுப்பு பற்றி பேசிய பெரியார் பற்றி எடுத்த படத்திற்கு இசையமைக்க மறுத்தது ஆகிய விஷயங்களை ஆய்வு செய்த மத்திய அரசு, அவரது ஆன்மீகப்பணியையும், தேசப்பற்றையும் இணைத்தே மதிப்பீடு செய்கிறது.

இந்த சூழலில் இளையராஜாவின் எம்.பி., பதவி நியமனத்திற்கு கிடைத்த வரவேற்பினை விட, அவர் 'கடவுளின் அருளால்' பொறுப்பேற்ற விதத்தை கொண்டாடாத இந்து ரசிகர்களே இல்லை என்ற நிலை தான் தமிழகத்தில் காணப்படுகிறது. இந்த சூழலில் இந்துக்களின் ஓட்டுக்களும், இளையராஜாவின் ரசிகர்களின் ஓட்டுக்களையும் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய பா.ஜ., திட்டமிட்டுள்ளது.

இதற்காக கலை, பண்பாட்டுத்துறை இணை அமைச்சர் பதவியை வழங்க ஆலோசித்து வருகிறது. பா.ஜ., எதிலும் நிதானமாக திட்டமிட்டே செயல்படுகிறது. இளையராஜாவிற்கும் இணை அமைச்சர் பதவி கொடுத்தால், தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.,வின் பலம் கூடும். வரும் லோக்சபா தேர்தலில் அந்த பலம் பெரிய அளவில் உதவும் என பா.ஜ., மதிப்பீடு செய்துள்ளது. தற்போதைய சூழலில் பா.ஜ.,வின் மனநிலை இளையராஜாவை மத்திய அமைச்சராக்கி அலங்கரிக்கும் விதத்தில் உள்ளது என தமிழக பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!