மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும் இளையராஜா, விஜய் ஆண்டனி
இளையராஜாவும், விஜய் ஆண்டனியும்.
மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இருவருக்கும் மாபெரும் துன்பியல் சம்பவம் நடந்தது. பெற்ற மகளை, சீராட்டி வளர்த்த செல்ல மகளை காலனுக்கு பறிகொடுப்பதை விடவும் சோகம் இந்த உலகில் இல்லை.
80 வயதில் இளையராஜாவுக்கு இந்த சோகம் என்று நினைத்த போது, அவரது உடல்நிலை, மனநிலை குறித்து மனம் கவலை கொண்டது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தோம். 50 வருடங்களாக உழைப்பு ஒன்றைத் தவிர வேறெதுவும் தெரியாத இளையராஜாவுக்கு, மீண்டும் அந்த உழைப்பு தான் கை கொடுத்திருக்கிறது.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல, இசைக்காகவே இந்த பிறப்பு என்பதை ராஜாவும் உணர்ந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது தினசரி வேலைகளை தொடர்கிறார். தினமும் இசையமைக்கிறார். பாடல் பாடுகிறார். கான்சர்ட்டுக்கு பயிற்சி கொடுக்கிறார். சமீபத்தில் இலங்கையில் கான்சர்ட் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியும் இருக்கிறார். உலகம் முழுவதையும் தன் இசையால் ஆற்றுப்படுத்தியவருக்கு, அந்த இசையே ஆறுதலாக இருக்கிறது. அது ஒன்றே அவரை இயங்க வைக்கிறது.
விஜய் ஆண்டனிக்கு நேர்ந்தது இன்னும் பெரிய சோகம். பவதாரிணியை பொறுத்த வரை குடும்பத்தாருக்கு அவருக்கு புற்றுநோய் என்று முன்னரே தெரிந்திருந்தது என்பதால் மனதளவில் அவரது பிரிவிற்கு தயாராக இருந்திருக்க ஒரு வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆசை ஆசையாக வளர்த்த மகள் தன் உயிரை மாய்த்துக் கொண்டது காலத்துக்கும் மனதை அரிக்கும் ஒரு கேள்வியாக மிச்சமிருக்கும். அவளது பிரச்சினையைப் பற்றி நமக்கு தெரிந்திருந்தால், எதையாவது செய்து அவளை காப்பாற்றி இருக்கலாமே என்று மனம் ஆற்றாமையில் அழுவதை தடுத்து நிறுத்துவது மிக கடினம்.
ஆனாலும் விஜய் ஆண்டனி இந்த சோகத்தில் இருந்து மீண்டெழுந்த வந்தது மட்டும் அல்லாமல், பலருக்கும் ரோல்மாடலாக இருக்கிறார். மகளின் இழப்புக்கு முன்னர் தான் பெரும் விபத்தை சந்தித்திருந்தார். சமீபத்தில் மணிமேகலையுடன் அவர் பேசிய காணொளி வைரல் ஆனது. தொடர்ச்சியாக கான்சர்ட்களை நடத்தி வருகிறார். பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் பாசிட்டிவாக பேசுகிறார். தேர்தல் அன்று கூட மீடியாவிடம் கலகலப்பாக உரையாடினார்.
வாழ்வில் இழப்புகளை தடுக்கும் சக்தி நம் கையில் இல்லை. இழப்புகளை, கடந்து போன வாழ்க்கையை நினைத்து நம் கடமைகளை மறக்கக்கூடாது. ஒரு மாபெரும் இழப்பில் இருந்து எப்படி மீண்டு வரவேண்டும் என்பதை இளையராஜாவும், விஜய் ஆண்டனியும் எல்லோருக்கும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu