அமைச்சரவையில் புதிய முகங்கள்..! இவர்கள் `டிக்’ ஆனது எப்படி?
தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் மற்றும் ஆளுனருடன்
தமிழ் நாட்டில் புதிய அமைச்சர்கள் சிலர் எப்படி தேர்வு செய்யப்பட்டனர் என்பதை பார்க்கலாம் வாங்க.
உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கியது, சீனியர் அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறை வழங்கியது. மூவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியது. நான்கு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது என இந்த முறை மாற்றம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
இதில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி.செழியன் என இருவர் புதிதாக அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார்கள். வழக்கு விவகாரத்தில் சிக்கி சிறை சென்றதால் தனது பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜிக்கும், பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது சர்ச்சைகள் எழுந்ததால் நீக்கப்பட்ட நாசருக்கும் மீண்டும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டவர்களில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, ஆர்.ராஜேந்திந்திரனுக்கு சுற்றுலாத்துறை, முனைவர் கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறை, சா.மு.நாசருக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் ஏன் இந்த மாற்றங்கள் புதியவர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்ததன் பின்னணி என்ன..?
“செந்தில் பாலாஜிக்காகத்தான் அமைச்சரவை மாற்றமே, இவ்வளவு தாமதமாக நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மஸ்தானை நீக்கியதால் அங்கே ஓர் இஸ்லாமியருக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் பதவி நாசருக்கு கொடுக்கப்பட்டு, அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது”.
“கோவி செழியன் உதயநிதி சாய்ஸ். அதுமட்டுமல்ல, மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்த போது, ‘டெல்டாகாரன் என்பதால் தஞ்சாவூருக்கு நானே பொறுப்பு அமைச்சர்’ எனப் பேசியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தஞ்சாவூர் பொறுப்பு அமைச்சராக நியமித்தார். அப்போது தொட்டு இப்போது வரை அமைச்சர் அன்பில் மகேஸிடமும் கோவி செழியன் நெருக்கமாக இருந்ததோடு அவரது நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்.
எனவே, அமைச்சராக கோவி செழியனை அறிவிக்க அன்பில் மகேஸும் ஒரு காரணம். கொறடாவாகவும் கோவி செழியனின் பணி சிறப்பாகவே இருந்தது. முனைவர் பட்டம் பெற்றவர் எனப் பல்வேறு யோசனைகளுக்கு அடுத்தே கோவி செழியனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில், உயர்கல்விக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல் முறை. இதுவும் கோவி செழியனுக்குக் கிடைத்த சிறப்பு என்கிறார்கள்.
மேலும், தற்போது உயர்கல்வியில் ஆளுநரின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கே, தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவரை அமைச்சராக நியமிக்கும்போது பெரியளவில் எதிர்ப்பு வராது என்பதாலும் கோவி செழியனுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
2021-ல் ஆட்சி அமைந்தபோதே பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் அமைச்சரவையில் இடம் இருக்கும் எனப் பேசப்பட்டது. ஆனால், அப்போது நடக்கவில்லை. இந்த முறை அமைச்சரவை மாற்றம் என்ற பேச்சு எழுந்தபோதே அதில் ராஜேந்திரனுக்கு ஓர் இடம் உறுதி என்ற பேச்சு எழுந்தது. இது முதல்வரின் சாய்ஸ் என்கிறார்கள்.
சேலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே ஒரு தி.மு.க எம்.எல்.ஏ-தான் வெற்றிபெற்றார். ஆனால், அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. ராஜேந்திரன் சார்ந்த சமூகத்தில் ஏற்கெனவே மூவர் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டிருந்ததால் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை.
ஆனால், கடந்த சில நாள்களாக சேலம் மாவட்ட கட்சி நிர்வாகிகள் தங்கள் மாவட்டத்துக்கும் ஒரு பிரதிநித்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அதை பொறுப்பு அமைச்சர் நேருவும் ஏற்றுக்கொண்டு தலைமையிடம் பேசியிருக்கிறார். இதெல்லாம் சேர்ந்து ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் இடம் பெற்றுத் தந்திருக்கிறது.
ஆனால், அமைச்சர் ராஜேந்திரனுக்குப் பொறுப்பு வழங்கக் கூடாது என்றும் கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் தலைமையிடம் முட்டி மோதினார்கள். ஆனாலும் அமைச்சரவையில் இடம் பிடித்து விட்டார் ராஜேந்திரன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu