ஓரு மாணவருக்கு தமிழக அரசு படிப்புக்கு செலவு செய்யும் பணம் எவ்வளவு தெரியுமா? (Exclusive)

அரசு பள்ளி மாணவர்கள் (கோப்புப் படம்)
தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு இந்த ஆண்டு 36 ஆயிரத்து 895 கோடியே 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம், பள்ளிகளில் வழங்கப்படும் சீருடைகள், புத்தகங்கள், வேறு பல நலத்திட்டங்கள், சத்துணவு உட்பட அத்தனை அரசு செலவுகளும் அடங்கும். அரசு மாணவர்களின் கல்விக்கு மட்டுமே அதுவும் ஒரு ஆண்டுக்கு இவ்வளவு பணம் செலவிடுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 37 ஆயிரத்து 579 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மட்டும் 45 லட்சத்து 93 ஆயிரத்து 422 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22 லட்சத்து 25 ஆயிரத்து 308 பேர் படிக்கின்றனர். இவர்களின் படிப்பிற்கான அத்தனை செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. ஆக மொத்தம் 68 லட்சத்து 18 ஆயிரத்து 730 மாணவ, மாணவிகள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு செலவில் படிக்கின்றனர். இவர்களை படிக்க வைக்கவே அரசு இந்த ஆண்டு 36 ஆயிரத்து 895 கோடியே 89 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதாவது ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு 54 ஆயிரத்து 109 ரூபாய் 62 பைசா அரசு செலவிடுகிறது. பனிரெண்டு ஆண்டுகள் அரசு பள்ளியில் ஒரு மாணவனோ, மாணவியோ படித்து முடிக்க அரசு எவ்வளவு பணம் செலவிடுகிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இது பல மெட்ரிக்., மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட அதிகம். நாம் சும்மா பெயருக்கு அரசு பள்ளிகளில் என்ன இருக்கிறது என கூறி விடுகிறோம். உண்மையில் தமிழக அரசு மாணவ, மாணவிகள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அதற்காகவே இவ்வளவு பணத்தை வாரியிறைக்கிறது. இந்த பணம் உண்மையி்ல் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தி இருக்கிறதா? என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
காரணம் தமிழகத்தின் பள்ளிகளில் கல்வித்தரம் மிகவும் குறைவாக உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கற்பித்தல் திறனும் மிக, மிக குறைவாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் இவ்வளவு செலவு செய்து, அரசு மாணவர்களை படிக்க வைத்தாலும், அவர்களால், 'நீட்' தேர்வு மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெற்று, மருத்துவம் மற்றும் முக்கிய பொறியியல் கல்லுாரிகளில் கூட சேர முடியாமல் திணறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வளவு பணம் அரசு செலவிட்டும், அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் மருத்துவக் கல்லுாரியில் சேர வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளதால், பணம் செலவிடும் அரசின் நிர்வாக குளறுபடி காரணமா? அல்லது தரமான கல்வி வழங்காத கல்வித்துறையின் அசட்டையான போக்கு காரணமா என்பது தெரியவில்லை. பணம் செலவிடும் கல்வித்துறை, அதற்கு சரியான வழியில் செலவிட்டு மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்.
ஆசிரியர் கற்பித்தல் திறன் பயிற்சி :
ஆசிரியர்களின் கற்பித்தல் திறன்களை மேம்படுத்த அரசு புதிய திட்டங்களை உருவாக்கவேண்டும். பயிற்சிகளை கட்டாயமாக்கவேண்டும். பல ஆசிரியர்கள் பயிற்சிக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்றுவிடுகிறார்கள். பின்னர் மாலையில் வந்து பயிற்சிக்கான பணத்தை பெற்றுக்கொண்டு மிகச்சசாதாரணமாக சென்றுவிடுகின்றனர். ஆசிரியர்கள் பயிற்சியில் அக்கறையுடன் கலந்துகொள்ளவேண்டும். பயிற்சியில் முழுமையாக கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற உணர்வு ஆசிரியர்களுக்கு ஏற்படவேண்டும். அரசுப்பள்ளியில் எத்தனையோ சிறந்த ஆசிரியர்கள் இருப்பதை காண்கிறோம். கடந்த வாரம் ஒரு சிறப்பாக ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கு இட மாறுதல் கொடுத்ததற்காக மாணவர்கள் கண்ணீர்சிந்தி அழுத காட்சிகளை நாம் பார்த்தோம். நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அரசு சிறப்பு கவனம் செலுத்த ஒரு குழு அமைத்து தமிழகத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டே மற்ற ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கலாம். அப்படிச் செய்தால் இன்னும் சில ஆண்டுகளிலாவது மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu