காமதேவன் விழா எனப்படும் ஹோலி தமிழர் பண்டிகை இல்லையா?
ரதி மன்மதன் - காட்சி படம்
வடக்கே கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை போன்றே தமிழ்நாட்டிலும் பண்டிகை இருந்துள்ளது. மன்மதனின் விழா எனப்படும் "காமதேவன் விழா" என முன்பொரு காலத்தில் இங்கும் அந்த விழா இருந்திருக்கின்றது என சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது
ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாடல் அதை தெளிவாக சொல்கின்றது, மார்கழி நோன்பை தொடர்ந்து தை மாசி மாதம் "அணங்க தேவன்" நோன்பு இருந்திருக்கின்றது, இங்கு வழிபட்டிருக்கின்றார்கள். மன்மதன் எனும் அணங்க தேவன் இன்று இந்துக்களின் வீழ்ச்சியால் இழிவாகிப்போனான். மன்மதன் என்பவன் ஆத்ம ரீதியான காதலை கொடுப்பவன், ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆத்ம பந்தத்தை ஆயுளுக்கும் கொடுப்பவன் என்பதுதான் இந்துமத போதனை.
இங்கே ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மட்டுமல்ல, சங்க இலக்கியங்களும் மன்மதனின் விழா "காமதேவன் விழா" என கொண்டாடப்பட்டதை சொல்கின்றது. அவன் கொடி மகரகொடி என்பதை சொல்லி, அவன் பண்டிகையில் இக்கொடியினை ஏற்றுவார்கள் என்கின்றது அகநானூறு பாடல்.
"நான்மறை முதுநூல் முக்கட்செல்வன்
ஆலமுற்றம் கவின்பெறத் தைஇய
பொய்கைசூழ்ந்த பொழில்மனைமகளிர்
கைசெய்பாவைத் துறைக்கண் இறுக்கும்
மகரநெற்றி வாந்தோய் புரிசைச்
சிகரம் தோன்றா சேணுயர் நல் இல்"
என அகநானூற்றுபாடல் மன்மதன் விழா அவன் கொடியோடு கொண்டாடப்பட்டதை சொல்கின்றது.
"காமற்கு வேனில் விருந்தெதிர்கொண்டு " "காமவேள்" என மன்மதனை கலிதொகை நிறைய இடங்களில் சொல்கின்றது.
"பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழு குவான்"
என காமனை கொண்டாடுகின்றார் வள்ளுவர்
"‘இரதி காமன் இவன் இவள் எனாஅ
விரகியர் வினவ விடையிறுப்போரும்.." என்கின்றது பரிபாடல்
"‘குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
சீராவு செவ்வாயும், சந்தன்று
‘காமற்கு விருந்து எதிர்கொண்டு..." என்கின்றது கலித்தொகை பாடல்,.
எல்லாவற்றுக்கும் மேலாக சிலப்பதிகாரம் பூம்புகாரில் காமதேவனுக்கு கோவில் இருந்ததையும் அங்கே அவனுக்கு விழா நடந்ததையும் சொல்கின்றது. இப்படி"வெங்கண் நெடுவேள் வில் விழாக்காணும், பங்குனி மயக்கத்துப் பனி அரசு யாண்டுளன்” என்கின்றது
இதெல்லாம் மாசி பங்குனி மாதங்களை ஒட்டிய காலத்தில் அன்று நடந்த விழாக்கள். மன்மதன் எனும் காமதேவனுக்காக நடந்த விழாக்கள். இதே காலகட்டத்தில்தான் வடக்கே ஹோலி பண்டிகையும், காம தகனமும் நடக்கும்.
ஆக ஒரு காலத்தில் இங்கும் காமவேள் பண்டிகை என அந்த பண்டிகை இங்கு விமரிசையாக இருந்திருக்கின்றது, பின்னாளைய புத்த சமண காலங்களில் அந்த பண்டிகை வழக்கொழிந்து அதன் பின் மீளவில்லை
ஆனால் வடக்கே மீட்டெடுத்து கொண்டாடுகின்றார்கள், தெற்கே இன்னும் மீட்டெடுக்கவில்லை என்பதுதான் விஷயம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu