கிராம சபை கூட்டத்தில் பள்ளிகள் குறித்து பேச உத்தரவு..!
கிராம சபைக்கூட்டம் (கோப்பு படம்)
ஆண்டு தோறும் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது சில முக்கிய நாட்களில் சிறப்பு கிராமசபை கூட்டங்களும் நடக்கும். இந்த ஆண்டுக்கான முதல் கிராம சபை கூட்டம் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில், அரசு பள்ளிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி, 26ம் தேதி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும். இதில், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை, உறுப்பினர்கள், தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த கூட்டங்களில், பள்ளிக்கல்வி சார்பில், அதிகாரிகள் அல்லது உள்ளூர் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊராட்சி பகுதிகளில், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது, கட்டமைப்பை உருவாக்குவது, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளி வளாக துாய்மை பணிகள் போன்றவை குறித்து, ஆசிரியர்கள் பேச வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்த கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தரம், மேம்பாடு குறித்து பேச உள்ளதால், இப்போதே பள்ளிகள் குறித்த விவரங்களை கிராம ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகங்கள் தயார் நிலையில் வைத்துள்ளன. பொதுவாக கிராம சபைக்கூட்டங்களில் கிராமங்களில் உள்ள வளர்ச்சித்திட்டங்கள் மற்றும் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து பேசப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பள்ளிகளின் நிலை பற்றியும் பேச உத்தரவிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu