தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை? : தமிழ்நாடு அரசு ஆலோசனை
தீபாவளி பண்டிகை வருகிற 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி, பட்டாசுகள் வாங்குவது, புத்தாடைகள் வாங்குவது என மக்கள் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். அத்துடன், பட்டாசு மற்றும் ஜவுளி கடைகளிலும் விற்பனை களைகட்டி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, ஞாயிற்றுக் கிழமை தீபாவளி வருவதால், சனிக்கிழமை ஒரு நாளும் சேர்ந்து வழக்கமான வார இறுதி விடுமுறை போல் முடிந்துவிடுமோ என்ற கலக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களிடமும் உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கல்வி, வேலைவாய்ப்புக்காக வந்து தங்கியிருப்பவர்கள் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை பயணத்தை தொடங்கினாலும், தீபாவளி தினமான ஞாயிறுக் கிழமை இரவே மீண்டும் கிளம்பினால் மட்டுமே மறுநாள் திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு வர முடியும்.
பண்டிகை முடியும் முன்பே கிளம்புவது ஒரு புறம் என்றால், ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்வதால் பேருந்துகள், ரயில்களில் நெருக்கடி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தீபாவளிக்கு மறுநாள் திங்கள் அன்று பொது விடுமுறையாக அரசு அறிவித்தால் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிவிட்டு சிரமமின்றி ஊர் திரும்ப முடியும் என்று பலதரப்பினரும் கூறி வருகின்றனர். பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான திங்கள் அன்று விடுமுறை அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டால், அதற்கு பதிலாக வேறொரு சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu