ஆளுநர் உரை விவகாரம்: யாருக்கு ஆதாயம்! யாருக்கு சேதாரம் ?

ஆளுநர் உரை விவகாரம்: யாருக்கு ஆதாயம்! யாருக்கு சேதாரம் ?
X
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல்நாள் கூட்டம் தமிழ்நாட்டையே தகிக்க வைத்திருக்கிறது

சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது என்பது வழக்கமான நடைமுறை தான் என்றாலும் இம்முறை நடந்திருப்பது வழக்கமில்லாத நடைமுறை. அதன் விளைவாக அதகளப்படுகிறது தமிழ்நாட்டு அரசியல் களம். இந்தி எதிர்ப்புக்கும், நீட் எதிப்புக்கும் தமிழ்நாட்டில் கிளம்பிய எதிர்ப்பின் தீவிரம் அளவுக்கு தற்போது தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் நுட்பமான உள் அரசியலை கையாண்டு வருவதைக் காணமுடிகிறது. இதை தங்களின் நிலைப்பாட்டை தக்கவைப்பதற்கான களமாக அரசியல் கட்சிகளும், ஆளுநரும் பயன்படுத்துகின்றனர். ஆளுநரை வைத்து திமுக அரசுக்கு எதிராக ஆட்சி நடத்த முயலும் பாஜகவும், அதைத் தடுத்து தமிழ் மக்களின் உணர்வைத்தூண்டி திராவிட அரசியலையும், தமிழக அரசையும் நடத்தப்பார்க்கும் திமுகவும்தான் இதை இத்தனை பெரிய அரசியலாக்குகிறார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழகம், தமிழக முதல்வர், தமிழக அரசு என்ற சொல்லாடல்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வழக்கத்தில் இருந்து வருவது தான். முதல்வர் ஸ்டாலின் தனது உரையிலேயேகூட தமிழக அரசு என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதையே இப்போது ஆளுநர் சொல்லும்போது அதன் அர்த்தமும் மாறுகிறது. தமிழ்நாடு அரசின் ரத்தமும் சூடேறுகிறது.

தமிழகம் என்ற வார்த்தையை சொல்வது திமுகவுக்கு சிந்தாந்த ரீதியாக ஒத்துப்போகாத ஆளுநர் என்பதுதான் அதற்குக் காரணம். ஆக, 'தமிழகம்' என்பதில் பிரச்சினை இல்லை. அதைச் சொல்லும் நபரால் தான் பிரச்சினை.

இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே ஸ்கோர் செய்பவர் என்றால் அது ஆளுநர் ஆர்.என்.ரவிதான். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறங்கி அடிக்கிறார். ஆரம்பம் முதலே அவரது கை ஓங்கியே இருக்கிறது. பதவியேற்ற நாள் முதலே திமுக கூட்டணி கட்சிகள் தன்னை எதிர்த்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதை செவ்வனே செய்து வருகிறார் ஆளுநர்.

பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை தன்னிச்சையாக அழைத்துக் கூட்டம் போட்டதில் தொடங்கி திராவிட மாடலுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தது வரைக்கும் ஆளுநர் தன் மனதில் பட்டதைச் செய்து கொண்டே இருக்கிறார். தற்போது தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்கிற அளவுக்கு ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை அழுத்தமாக எடுத்து வைத்து வருவதுடன் தமிழர்களின் அடிப்படை உணர்வுகளையும் உரசிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுவரையில்லாத அளவுக்கு, அரசால் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட உரையின் ஒரு பகுதியை படிக்காமலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களை வாசிக்காமலும் ஆளுநர் தவிர்த்திருப்பது ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கிறது. இது மோசமானதா அல்லது ஆரோக்கியமான முன்னுதாரணமா என்பது இனிவரும் நிகழ்வுகளும், காலமும்தான் உறுதிசெய்யும்.

நீங்கள் கொடுப்பதை நான் வாசிக்க முடியாது என்று மறுதலித்திருப்பது ஆளுநரின் ஆளுமையை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது, உடனடியாக அதிகாரிகளை அழைத்து அது என்னவென்று தெரிந்து கொண்டு அப்போதே அவையைவிட்டு வெளியேறியதும் கூட ஆளுமையின் உச்சகட்டம்தான்.

அவையிலிருந்து வெளியேறியதோடு மட்டுமல்லாது அன்றைய தினமே தனது செயலுக்கான நியாயத்தை வெளிப்படுத்தினார் ஆளுநர். "தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்பதை ஏற்க முடியாது, மிக அதிக நிதி முதலீட்டை பெற்றிருக்கிறது என்பதையும் ஏற்கமுடியாது. அதனால் அவற்றை வாசிக்கவில்லை" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார் .

இந்தச் சூழலில் ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் முழுமையாக களமிறங்கியிருக்கிறார்கள். ஆளுநராக அவரை நினைக்காமல் பாஜக தளபதியாகவே கருதி அண்ணாமலை தொடங்கி வானதி சீனிவாசன் வரைக்கும் அத்தனை பேரும் அவருக்காக வரிந்துகட்டி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களால், தங்களுக்காக கொண்டுவரப்பட்ட ஆளுநருக்கு ஆதரவாக தாங்கள்தான் களத்தில் நிற்க வேண்டும் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது பாஜக. அந்த விதத்தில் டெல்லி தலைமையை திருப்திப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆளுநர் பெரும் வெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். மறுபுறம், பாஜகவுடன் கருத்துவேறுபாடு கொண்டிருக்கும் அதிமுகவையும் தனக்கு ஆதரவாகப் பேச வைத்திருக்கிறார் ஆளுநர்.

ஆளுநரின் செயல்களை நியாயப்படுத்தியும், முதல்வரின் செயலை தவறென்றும் விமர்சித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ். "ஆளுநர் அவையில் இருக்கும்போது முதல்வர் தீர்மானம் நிறைவேற்றுவது தவறு. அது மரபல்ல" என்று அவர் தெரிவித்திருக்கிறார். அத்தோடில்லாமல், ஆளுநரை நேரில் சந்தித்தும் தங்களது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.

இப்படி அரசியல்வாதிபோல் தனக்கான ஆதரவை திரட்டி வரும் ஆளுநர், முறுக்கிக்கொண்டு நின்ற அதிமுகவையும் பாஜகவுக்கு இணக்கமாக கொண்டு வந்திருக்கிறார். பேரவையில் நடந்ததை நினைத்துப் பின்வாங்காமல் அடுத்ததாக பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்குப்பதில் தமிழக ஆளுநர் என அச்சடித்து ஆளும்கட்சிக்கு அடுத்த அட்டாக் கொடுத்திருக்கிறார் ஆளுநர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்த விஷயத்தில் மிகத் தெளிவாக காய் நகர்த்தி வருகிறார். தனது அரசையும், கட்சியையும் இதை வைத்து பலப்படுத்திக்கொள்ளும் வேலைகளை திட்டமிட்டு செய்துவருகிறார். அச்சடிக்கப்பட்ட ஆளுநர் உரையில் திருத்தங்கள் தேவை என்று ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து சொல்லப்பட்டபோது, இது அச்சடிக்கப்பட்டுவிட்டது, தேவை என்றால் நீங்கள் பேசும்போது மாற்றிக்கொள்ளலாம் என்று சொன்னதாக கூறப்படுகிறது. அதனால் ஆளுநர் தான் விரும்பாத சில வரிகளை படிக்காமல் விட்டிருக்கிறார்.

ஆனால், இதை உடனடியாக கண்காணித்து எதையெல்லாம் ஆளுநர் தவிர்த்தார் என்று பட்டியலிட்டு அடுத்த சில நிமிடங்களிலேயே ஆளுநரைக் கண்டிக்கும் விதமாக தீர்மானத்தை நிறைவேற்றியது திட்டமிடலும், முன்தயாரிப்பும் இல்லாமல் நடந்திருக்கக் கூடியதல்ல. ஆக, ஆளுநர் உரையின் போது என்ன நடக்கவேண்டும் என்பதை திட்டமிட்டு தயாராகவே இருந்திருக்கிறார் முதல்வர்.


அது மட்டுமின்றி ஆளுநரின் செயலைக் கண்டித்து விசிக, மார்க்சிஸ்ட் கட்சிகள் போராட்ட அறிவிப்பையும் உடனடியாக வெளியிட்டன. திமுக கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஆளுநருக்கு எதிராக அறிக்கை வாசித்தார்கள். மறுநாளே, கூட்டணிக்கட்சி தலைவர்களிடமும் திமுக எம்எல்ஏ-க்களிடமும் ஆலோசனை நடத்தி ஆளுநர் விவகாரத்தில் அடுத்து நடக்கவேண்டியது குறித்து ஆலோசனை வழங்கினார் ஸ்டாலின்.

தமிழ்நாடு என்ற விஷயத்தில் ஆளுநரின் கருத்தை திமுக ஆதரிக்கவில்லை என்றாலும், பேரவையில் உரை நிகழ்த்த வரும் ஆளுநரை அவர்களால் நேரடியாக எதிர்க்க முடியாது. ஆளுங்கட்சியாக இருப்பதால் ஆளுநரை கண்ணியத்துடன் பாதுகாக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு இருக்கிறது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அத்தகைய பொறுப்பும் கடமையும் இல்லை. இதைப் புரிந்துகொண்டுதான் ஆளுநர் உரை நிகழ்த்த முடியாத வண்ணம் கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்ட போது அதை தடுக்க மனமில்லாமல் சபாநாயகரும் முதல்வரும் அமைதி காத்தார்கள்.

இந்த விஷயத்தில், பிரதான எதிர்கட்சியான அதிமுக எப்படி நடந்து கொண்டிருக்கிறது? தங்களுக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விஷயமாக பிரச்சினை இருந்தாலும் அதற்காக அவையை புறக்கணிக்காமல் ஆளுநர் உரைக்காக அவைக்குள் வந்தது இபிஎஸ் தரப்பு. ஆளுநர் உரை முடிந்ததும், முதல்வர் கண்டனத் தீர்மானத்தை வாசிக்க எழுந்த நிலையில், அவையை விட்டு வெளியேறிய இபிஎஸ், "ஆளுநர் உரையைக் கேட்கத்தான் வந்தோம், ஸ்டாலின் பேச்சை கேட்க அல்ல" என்று நக்கலாக பதில் சொன்னார்.

"தமிழ்நாடு பெயர் விவகாரத்தில் பெரும்பாலானவர்கள் ஆளுநருக்கு எதிராக இருக்கிறார்கள். தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆளுநருக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும்போது அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுக மட்டும் தனித்து நிற்பது மக்கள் மனதில் அதிமுகவைப்பற்றி என்ன மாதிரியான தோற்றத்தை உருவாக்கும் என்று அதிமுக யோசிக்க வேண்டும்" என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

திமுக கூட்டணிக் கட்சிகளும், பாமகவும் இதை சரியாகவே கையாண்டிருக்கின்றன. கமல்ஹாசன், சீமான், விஜயகாந்த் உள்ளிட்டவர்களும் ஆளுநரின் செயலைக் கண்டித்திருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். பிரபலங்களும், சாமானியர்களும் சமூக வலைதளங்களில் ஆளுநரைக் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ஆக, ஆளுநருக்கு எதிராக ஒருமித்த கருத்தை உருவாக்கி களத்தை தனக்கு சாதகமாக திருப்புவதில் முதல்வர் ஸ்டாலின் முழு வெற்றி கண்டிருக்கிறார்.

ஆளுநரின் நடவடிக்கை குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக எம்பி-க்கள் சகிதம் டெல்லியில் குடியரசு தலைவரைச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். ஆளுநரும் கடந்த 13-ம் தேதி அவசரமாய் டெல்லிக்குப் பறந்துபோய் தன் தரப்பு நியாயத்தைச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

அடுத்து, யார் அடக்கி வாசிக்கப்போகிறார்கள்? யார் அடங்க மறுத்து ஆர்ப்பரித்துக் கிளம்பப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!