சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதே இலக்கு -முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான உரிய வழிகாட்டுதல்கள் தொடர்பான வினாவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து கூறியதாவது:
"சாலைகளில் மக்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகை செய்திட வேண்டும்" என்பது இந்த அரசினுடைய முதன்மையான இலக்கு. அதற்காக என்னுடைய தலைமையில் உயர் மட்டக் குழுக் கூட்டம் ஒன்றினை கடந்த 18-11- 2021 அன்று கூட்டி ஆலோசித்து, "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் - 48" என்ற உயிர் காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. "சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கும் அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கக்கூடிய இலவச சிகிச்சை சாலைப் பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், இன்னுயிர் காப்போம் - உதவி செய்" என்ற ஐந்து அம்சத் திட்டமாக அது இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நானே கடந்த 18-12- 2021 அன்று மேல்மருவத்தூர் சென்று "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காப்போம் 48" என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன் அன்று முதல் இத்திட்டம் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு சாலைகளில் பாதுகாப்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான அனைத்துச் சூழல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் விபத்துக்களில் சிக்குவோருடைய உயிர் காப்பாற்றப்படுகிறது. 18-12- 2021 முதல் 18-3-2022 வரை அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேரும், ஆக மொத்தம் 33 ஆயிரத்து 247 பேர் இந்த "48 மணி நேர இலவச" சிகிச்சையைப் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு சிகிச்சை பெற்றார்கள் என்பதைவிட, 33 ஆயிரம் குடும்பங்கள் இத்திட்டம் மூலம் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் இந்தத் திட்டத்திற்காக இதுவரை 29.56 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது என்பதையும், இத்திட்டம் மேலும் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பையும், சாலை விபத்தில் ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது என்பதையும் உறுதி செய்யக்கூடிய உயரிய நோக்கத்தோடு, அரசு இனி வரும் காலங்களிலும் தீவிரமாகச் செயல்படும். சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து அனுமதித்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்கருணை வீரன் என்ற நற்சான்றிதழும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது, என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu