மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரம்: அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரம்:  அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை
X

பைல் படம்

சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டு மென அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது

சென்னை அரசு மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, அச்சங்கத்தில் மாநிலத்தலைவர் டாக்டர் கே. செந்தில் வெளியிட்ட அறிக்கை: சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும் தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு உதவி தொகை வழங்கியது ஆறுதலாகவும் இருக்கும். இதற்கு சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில், பொதுவாக அந்த துறை மூத்த ஸ்பெஷலிஸ்ட் கருத்தை காவல்துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட், அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே, காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்றும், அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல், கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்க வில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி, தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்த்து, அவர்களை தனி படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின் பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல முன் ஜாமினை மறுத்து, உடனடியாக சரணடைய வேண்டுமென கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளது..

இந்த நிகழ்வில் சிவில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. மேலும் மருத்துவரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில், கிரிமினல் குற்றவாளி களை போல வெளியிட வேண்டாம் என்றும் சங்கம் வேண்டுகோள் வைக்கிறது.நோயாளியின் காலில் சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடிக்கப்பட்டு, அதன் பின் கவனக் குறைவினால் உயிர்ச் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும், அது Civil Negligence -ல் மட்டுமே வரும்.

இதில், போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானதும் எதிரானதும் என்று மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்கள் சங்கம் கருதுகிறது.எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304- ஏ பிரிவு மாற்றப்பட வேண்டும் என்றும், அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப் பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல் பட்டவர்கள்தான். கவனக்குறைவினால் துரதிருஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்வதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil