சேலத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: ஒருவர் உயிரிழப்பு
மிதப்பு பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர்.
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில் கோபி வீட்டில் அவரது தாயார் ராஜலட்சுமி இன்று காலை வழக்கம்போல் சமையல் செய்வதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அருகில் இருந்த வீடும், மேல்தளத்தில் இருந்த இரண்டு வீடும் என நான்கு வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் கட்டடத்தின் பாகங்கள் வெடித்து சிதரியதில் பால் வியாபாரி ஒருவரும், எதிர் வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த தனலட்சுமி என்பவரின் மீதும் விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடிகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுதர்சன், கோபால், சுப்பிரமணி, தனலட்சுமி, நாகசுதா, இந்திராணி, மோகன்ராஜ், கோபி, லோகேஷ், ராஜலட்சுமி , வெங்கடராஜன் ஆகியோரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 80 வயதான ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். மூன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு முருகன் என்பவரது 10 வயது மகள் பூஜாஸ்ரீ என்ற சிறுமி காயத்துடன் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தீயணைப்பு துறையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் அவரது மனைவி தேவி மற்றும் பூஜாஸ்ரீயின் அண்ணன் கார்த்திக் ராம் ஆகிய மூன்று பேரும் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்பு பணியில் 55 பேர் ஈடுபட்டு இருப்பதாகவும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்கும் பொருட்டு மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்தார். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் விசாரணையின் முடிவிலேயே விபத்துக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.
பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை நேரில் கண்காணித்து வருகின்றனர்.விபத்து குறித்து செவ்வாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu