ஜெயக்குமார் முதல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை! கொலை நகரமாகிறதா சென்னை?

ஜெயக்குமார் முதல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை! கொலை நகரமாகிறதா சென்னை?
X
சென்னையில் மட்டும் கடந்த ஆறு மாதத்தில் 58 கொலைகள் நடந்துள்ளன என ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவரைக் காணவில்லை என்று கடந்த மே மாதம் முதல் வாரத்தில் ஜெயக்குமாரின் மகன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெயகுமாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலை நடந்து வாரங்கள் கடந்தும் கொலை குற்றவாளிகள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் விசாரணை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.

அதேசமயத்தில் ஜெயக்குமார் எழுதியதாகச் சொல்லப்படும் இரண்டு கடிதங்கள் கிடைத்தன. அந்த கடிதத்தின் அடிப்படையிலும் பலரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. ஜெயக்குமாரின் செல்போன் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல, அவர் கடைசியாகச் சென்ற இடங்களிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அடிப்படையில் விசாரணை முடக்கி விடப்பட்டது. இருந்த போதிலும், கொலையாளி யார், அது கொலையா தற்கொலையா என்பது கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது காவல்துறை. சுமார் இரண்டு மாதங்களைத் தாண்டியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

அதிமுக பிரமுகர் படுகொலை:

சேலம் அருகில் உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்த சண்முகன் என்பவர் அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த ஜூலை 3-ம் தேதி இரவு 12 மணியளவில் தாதகாபட்டி அதிமுக அலுவலகத்திலிருந்து தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். அந்த சமயத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சண்முகத்தைச் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது. தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டியதில் முகம் கொடூரமாகச் சிதைந்து சண்முகன் சம்ப இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் குறித்து ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தது காவல்துறை. விசாரணையில் திட்டமிட்டு இந்த படுகொலை நடந்தது தெரியவந்தது. சண்முகன் அந்த பகுதியில் சட்டவிரோதமாக நடைபெற்ற கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். தங்கள் தொழிலுக்கு இடையூறாக இருந்த சண்முகத்தை அந்த கும்பல் கூலிப்படை வைத்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலைக் குற்றம் தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலரின் கணவர் சதிஷ் உட்பட ஒன்பது பேர் கைது செய்திருக்கிறது காவல்துறை.

படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்:

அதிமுக உறுப்பினர் படுகொலை செய்யப்பட்ட செய்தி அடங்குவதற்கு முன்பாகவே மற்றொரு அரசியல் கொலை தலைநகர் சென்னையிலேயே நடந்து முடிந்திருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. அதனைப் பார்ப்பதற்காகச் சென்று அங்கே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் அவர். அப்போது அங்கு உணவு விநியோக உடையில் வந்த சிலர், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் ஆம்ஸ்ட்ராங்கைக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

ஆம்ஸ்ட்ராங்கின் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரின் ஆதரவாளர்கள் கொலையாளிகளைக் கைது செய்யவேண்டும் என்று சொல்லி சாலைமறியலில் ஈடுபடத் தொடங்கினர்.

இந்நிலையில் கொலையாளிகள் எட்டு பேரைக் கைது செய்ததாகத் தகவல் வெளியிட்டது சென்னை காவல்துறை. விசாரணையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலைக்குப் பழிதீர்க்கும் விதமாக இந்த கொலை நடந்ததாகத் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறை, உளவுத்துறையின் தோல்வியே இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறக் காரணம் என்று அரசியல் தலைவர்கள் பலரும் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை, உளவுத்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். "உண்மையில் காவல்துறையின் தோல்வி என்று சொல்லிவிட முடியாது. நெல்லை ஜெயக்குமார் கொலை வழக்கில் அது கொலையா தற்கொலையா என்பதே இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது முடிவில்தான் தெரியவரும். அதேபோல, சேலம் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் கொலையாளிகள் அனைவருமே உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், காவல்நிலையத்தில் புகார் கொடுத்த ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது.

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கைப் பொறுத்தவரை அது பல மாதங்களாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு கொலை. உளவுத்துறை எந்த முன்னெச்சரிக்கையும் கொடுக்கவில்லை என்பதை ஆணையர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கொலை நடந்த ஒருசில மணிநேரத்திலேயே கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த ஜூன் மாதம் சென்னை கொருக்குப்பேட்டையில் தினேஷ் என்று ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்ததும் கவனக்குறைவாகச் செயல்பட்டக் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காவலர்களே பணியில் எதுவும் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதேபோல, சென்னையில் கடந்த ஒருமாதத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் குடும்ப தகராறு, முன்விரோதம் காரணமாகக் கொலைகள் தான் அதிகம். அனைத்து தவறுகளுக்கும் காவல்துறையைக் கைகாட்டுவது ஏற்புடையது இல்லை" என்றார்கள்.

அவர்கள் சொல்வது ஒருபுறமிருந்தாலும், ஜெயக்குமார் கொலை நடந்து பலமாதங்கள் ஆகியும் இன்னும் அது கொலையா என்பதைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடங்கி பல்வேறு விவகாரங்களில் முன்கூட்டியே குற்றத்தை தடுக்க வாய்ப்பிருந்தும் அதனை காவல்துறை செய்யத்தவறி தோல்வியடைந்து வருவதை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம்.

சென்னையில் ஒருமாதத்தில் மட்டும் கஞ்சா விற்பனை தொடர்பாகவே மூன்று கொலைகள் நடந்திருக்கிறது. இவை அனைத்திற்குமே காவல்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்கிறார்கள் பொதுமக்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!