கட்டுமானத் தொழிலாளர்கள் 100 பேருக்கு இலவச திறன் பயிற்சி: முதல்வர் தொடங்கி வைப்பு

கட்டுமானத் தொழிலாளர்கள் 100 பேருக்கு இலவச திறன் பயிற்சி: முதல்வர் தொடங்கி வைப்பு
X

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சி மற்றும் 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சி மற்றும் 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக, தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் ஆட்சிமன்ற குழுக்களின் தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், துணை தலைவராக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவரும், உறுப்பினர் செயலாளராக தொழிலாளர் ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு தரப்பு பிரதிநியாக தொழிலாளர் நலத் துறை செயலாளரும், நிதித்துறை செயலாளரும், பொதுப்பணி துறை செயலாளரும், நெடுஞ்சாலை துறை செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் CREDAI, Builders Association of India (BAI), CII, FICCI மற்றும் Construction Industrial Developmental Council (CIDC) பிரதிநிதிகளும் ஆட்சிமன்ற குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கட்டுமானக் கழகம், அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் மூலம் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழில் சார்ந்த நவீன பயிற்சிகளை அளித்து வருகிறது.

ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட மாதிரி நலத்திட்டத்தின் (Modified Model Welfare Scheme) அடிப்படையில், கட்டுமானத் தொழிலாளர்களும் அவர்களுடைய வாரிசுதாரர்களும் திறன் மேம்பாடு பெறுவதற்கு ஏதுவாக மாநில அரசின் திறன் மேம்பாட்டு கழகம் / ஒன்றிய அரசின் திறன் மேம்பாட்டுத் துறை / தேசிய திறன் மேம்பாட்டு கழகம் இவற்றின் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சியும், உதவித்தொகையும், பயிற்சிக்கான கட்டணமும் வழங்கப்படுகிறது.

இவ்வரசு பொறுப்பேற்றப் பின்னர், தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் மூன்றாவது ஆட்சி மன்றக் குழு கூட்டம் 24.08.2022 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு கட்டுமான கழகத்தை மறு சீரமைக்க தீர்மானிக்கப்பட்டு சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரிய கட்டடத்திலிருந்து, தமிழ்நாடு கட்டுமான கழகம் தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 23 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 54 வகையான தொழில் இனங்களில் பதிவு செய்துள்ளனர். பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தங்களுடைய தொழிலினை திறம்பட செய்யவும், புதிதாக தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் திறன் பெற ஏதுவாகவும் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் பயிற்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக தச்சர், கொத்தனார், கம்பி வளைப்பவர், பிளம்பர் மற்றும் எலக்டீரிசியன் உள்ளிட்ட 5 தொழில் இனங்களில் ஈடுபடும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும், 3 மாதங்கள் திறன் பயிற்சியும் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாடு கட்டுமானக் கழகம் இப்பயிற்சி வழங்க ஏதுவாக கட்டுமான தொழில் வளர்ச்சி குழுமம் (CIDC) மற்றும் L&T கட்டுமான பயிற்சி நிலையம் (Larsen & Toubro Limited L&T Construction) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஏற்படுத்தப்பட்டது.

7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு (Skill Up-gradation Training) வரும் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ.800/- வேலை திறன் இழப்பீட்டு உதவித்தொகையும், இலவச தங்குமிடமும், 3 மாதங்கள் திறன் பயிற்சியில் (Skill Development Training) கலந்து கொள்ளுபவர்களுக்கு உணவு, தங்குமிடமும் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி கட்டணம் ஏதும் இல்லை.

2023-2024-க்கான தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள், அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆண்டொன்றுக்கு 4000 நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் மற்றும் தச்சர், கொத்தனார், கம்பி வளைப்பவர், பிளம்பர் மற்றும் எலக்டீரிசியன் ஆகிய கட்டுமானப் பணிகளில் புதிதாக ஈடுபட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களில் ஆண்டொன்றுக்கு 1000 நபர்களுக்கு திறன் பயிற்சி அளித்தல் ஆகியவை தமிழ்நாடு கட்டுமானக் கழகம் மூலம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, 4000 தொழிலாளர்களுக்கு ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியும், 1000 தொழிலாளர்களுக்கு மூன்று மாதகால திறன் பயிற்சியும் ஆண்டுதோறும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் வழங்கிட 5 கோடியே 86 இலட்சம் ரூபாய் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் முலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, முதற்கட்டமாக, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு நிதியாண்டிலும் 5000 கட்டுமான தொழிலாளர்கள் பயிற்சி பெற்று பலன் பெறுவர். இப்பயிற்சியின் வாயிலாக தொழிலாளர்களின் தொழில்திறன் மற்றும் ஆற்றல் மேம்பட்டு, தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு பெற்று அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை ஏற்படும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!