புதுக்கோட்டை அருகே இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பன்னோக்கு மருத்துவமுகாமில் மருந்து பெட்டகம் வழங்கிய சட்ட அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (24.06.2023) தொடக்கி வைத்து, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்துப் பெட்டகங்களை வழங்கி, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் , முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இன்றையதினம் 100 மருத்துவ முகாம்கள் நடத்திட அறிவுறுத்தியுள்ளார். அதன்படி வயலோகம் அரசு மேல் நிலைப் பள்ளியில், இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியி லிருந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சிறப்பு மருத்துவர்கள் இணைந்து பொதுமக்களின் பல்வேறு விதமான உடல்நல மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கிட உள்ளார்கள். அனைத்து விதமான ஆய்வக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சை மற்றும் உயர் சிகிச்சைக்கான பரிந்துரைகள் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.அதன்படி, மருத்துவ வசதிகள் சென்றடையாத இடங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே மருத்துவ முகாம்கள் நடத்தி நிறைவேற்றி வைப்பதாகும்.
பல்வேறு விதமான நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் நலன், பல்மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை இருதயநோய், நீரிழிவு நோய், புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. இம்மருத்துவ முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த மருத்துவ முகாமில், கண்ணொளி காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்தவம் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாகவும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இது போன்ற மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயனடைய வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் , மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்த.ஜெயலட்சுமி, தென்னலூர் பழனியப்பன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.ராம்கணேஷ்,
ஒன்றிய குழுத் தலைவர் வி.ராமசாமி,கே.எஸ்.சந்திரன், மாரிமுத்து, ஊராட்சிமன்றத் தலைவர் செண்பகவள்ளி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu