முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடைசியாக சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடைசியாக  சாப்பிட்ட உணவு என்ன தெரியுமா?
X

ராஜீவ்காந்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதுாரில் குண்டு வெடிப்பில் உயிரிழக்கும் முன்பு, கடைசியாக சாப்பிட்ட உணவு என்னவென்று பார்க்கலாம்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை சென்று வருகிறார். அவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தை ராஜீவ்காந்தி நினைவு இடத்துக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்திய செய்தியைப் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

அப்போது, அவர் தன் தந்தை நினைவாகச் சில மாம்பழங்களையும் வைத்து வணங்கியதைப் பலரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை. இதற்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு, மே 21-ம் தேதி ஶ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அன்று ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, சென்னை வந்தார். விமானம் பழுது காரணமாகப் பயணம் தாமதமானது.

ஆந்திராவின் காரசாரமான உணவை மதியம் அவர் சரியாக உண்ணவில்லை. ஶ்ரீபெரும்புதூர் செல்லும் முன்பு, ஆந்திர மாநில காங்கிரஸ் பிரமுகர் பப்பி ராஜு என்பவர், தன் தோட்டத்தில் விளைந்த `பெத்தரச(லு)ம்' (Pedda Rasalu) என்ற மாம்பழத்தைச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார். அதன் சுவை ராஜீவ்காந்திக்குப் பிடித்துப்போக, இன்னொரு மாம்பழத்தையும் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். இறப்பதற்கு முன்பாக அவர் சாப்பிட்ட கடைசி உணவு அந்த மாம்பழங்கள் மட்டுமே. ராகுல் காந்தி வந்திருந்தபோது, அவர் தந்தை கடைசியாகச் சாப்பிட்ட அதே மாம்பழ ரகத்தை, ஆந்திராவிலிருந்து தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து வைத்துப் படைத்திருந்தார்கள்.

அந்த மாம்பழங்களை படைத்து தனது தந்தையை வழிபட்ட ராகுல்காந்தி, இதே ரகத்தை சேர்ந்த சில மரக்கன்றுகளையும் அங்கு நட்டு வைத்துள்ளார். இந்த தகவல் இப்போது தான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இதனால் 'பெத்தரச(லு)ம்' ரக மாம்பழத்தை சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தேடிக் கொண்டு உள்ளனர். இவர்கள் இதே மாம்பழ ரகத்தை தங்கள் வீடுகள், தோட்டங்களிலும் வளர்க்கவும் தயாராகி வருகின்றனர்.

இதற்காக சிலர் ஆந்திரா சென்று இந்த ரக மா கன்றுகளை வாங்கி வந்து தங்கள் தோட்டங்களில் நடவு செய்துள்ளனர். அந்த அளவிற்கு அந்த மாம்பழங்கள் சுவையாக இருந்துள்ளன. ராஜீவ்காந்தி உயிரிழப்பதற்கு முன்னர் விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டதால், இந்த மாம்பழங்கள் மீது மக்களுக்கு ஒரு அலாதி பிரியம் வந்துள்ளது. இந்த ரக மாம்பழங்கள் இரவு நேரத்தில் குளிர்ச்சியான பருவநிலை, பகல் நேரத்தில் வெப்பம் நிறைந்த பருவநிலையில் தான் நன்கு வளரும். இது போன்ற பருவநிலைகள் தமிழகத்தில் இல்லை. இதனால் இந்த வகை பழமரங்கள் தமிழகத்தில் வளருமா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இருப்பினும் மக்கள் ஆர்வமாக நடவு செய்து வருகின்றனர். வளர்ந்தால் இந்த மாம்பழங்கள் ராஜீவ்காந்தி பெயரிலேயே பிரபலமாகும் வாய்ப்புகள் உள்ளது என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!