"தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்: இதுவே கடைசியாக இருக்கட்டும்" : முதல்வர் உருக்கம்!
சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய கண்ணையா தீக்குளித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
"மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்தும், அதில் கண்ணையா என்பவர் தீக்குளித்து இன்று காலையிலே உயிரிழந்திருக்கிறார் என்பது குறித்தும், சட்டமன்றத்திலே எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை வருவாய்த் துறை அமைச்சர் இங்கே விளக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
மயிலாப்பூரில் ஒரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி வரக்கூடிய காலக்கட்டத்திலே இதுபோன்று ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடிய பணியை மேற்கொள்கிற நேரத்தில், முன்கூட்டியே அந்தப் பகுதி மக்களுக்கு மறுகுடியமர்வு செய்யக்கூடிய இடம் குறித்து, அவர்களுடைய கருத்துகள் கேட்கப்படும்.
மேலும், அந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளோடு இதுகுறித்து கலந்துபேசி, ஒரு இணக்கமான சூழ்நிலையை வரக்கூடிய காலக்கட்டத்தில் நிச்சயமாக நாங்கள் ஏற்படுத்துவோம். அவர்களுக்கான புதிய இடத்தில், தேவைப்படும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் மறுகுடியமர்வு செய்யப்படுவார்கள். இதற்காக மறுகுடியமர்வு கொள்கை ஒன்று, அனைத்து மக்கள் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டு விரைவிலே அதற்குரிய விதிமுறைகளோடு வகுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைக்கு நீங்கள் தெரிவித்த அனைத்துக் கருத்துக்களோடு, அதைவிட கூடுதல் மனச் சுமையுடனுடம், ஆழ்ந்த துயரத்துடனும் நானும் இதிலே பங்கேற்கிறேன். இந்தச் சம்பவம் கடைசி சம்பவமாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இங்கே அமைச்சர் அவர்கள் சொல்கிறபோது, அருகிலேயே, அந்தப் பகுதியிலேயே, அவர்களுக்கு மறுகுடியமர்வு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள் என்ற ஒரு நிலையை எடுத்துச் சொன்னார்கள்.
ஏற்கெனவே, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின்மூலம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளிலே கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய வீடுகளில், அவர்களுக்கு நிச்சயமாக வீடுகள் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு முடிவெடுத்திருக்கிறது என்று முதல்வர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu