பால் ஊக்கத்தொகை கேட்டு உண்ணாவிரதம்; விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பால் ஊக்கத் தொகையினை ஆவின் நிறுவனம் உடனடியாக வழங்க கோரிக்கை ( மாதிரி படம்)
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கடந்த மூன்று மாதமாக நிலுவையில் உள்ள ரூபாய் 100 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக விடுவித்து பால் உற்பத்தி செய்யும் 8 லட்சம் விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையென்றால் சென்னையில் உள்ள ஆவின் தலைமையகத்தின் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பால் உற்பத்தியில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்க, பால் விற்பனை செய்யும் நிறுவனங்களின் லாபமோ பெருகிக் கொண்டிருக்க, ஆவின் நிறுவனத்தில் மட்டும் ஊழல் காரணமாக நஷ்டக் கணக்கு எழுதுவது ஆட்சிகளை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது.
ஒரு லிட்டர் தண்ணீரை 20 ரூபாய்க்கும், ஒரு குவாட்டர் 140 ரூபாய்க்கும் விலை கொடுத்து வாங்கும் மக்கள் இருக்கும் மாநிலத்தில், பால் விற்பனை விலையை ஏற்றினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தவறான கருத்தை சொல்லி தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாக நசுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தினசரி இரண்டு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது, இதில் ஆவின் நிறுவனம் மட்டுமே சராசரியாக 35 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது, 20 லட்சம் உறுப்பினர்கள் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தற்போதைய நிலவரத்தில் சராசரியாக 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறு - குறு விவசாயிகளின் ஒரே வாழ்வாதாரமாக விளங்கி வருவது ஆவின் நிறுவனம் மட்டுமே ஆகும், ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் விவசாயிகளின் நலனை காப்பதற்காக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து வழங்கி வருகிறது, மாதந்தோறும் வழங்க வேண்டிய ஊக்கத்தொகை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் என தாமதமாக வழங்குவதால், விவசாயிகளும், பால் கூட்டுறவு சங்கங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் பால் கூட்டுறவு சங்க செயலர்களிடம் தினசரி ஊக்கத்தொகை வரவு வைக்காதது குறித்து சண்டையில் ஈடுபடுவதும், தகராறு செய்வதுமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதற்கு காரணம் கடந்த மூன்று மாத காலமாக தமிழ்நாடு அரசு வழங்கி வரும் லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாததேயாகும்.
கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் குவாரிகளில் இறக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு, கள்ளச்சாராயம் குடித்து இறப்பவர்களுக்கு 10 லட்சம் வழங்கும் தமிழ்நாடு அரசு, பால் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்காமல் மூன்று மாதமாக நிறுத்தி வைத்திருப்பது கடுமையான வருத்தத்திற்குரிய செயலாகும்.
எனவே தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விரைந்து நிலுவையில் உள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறு காக்க தவறினால் வேறு வழியின்றி ஆவின் தலைமையகத்தின் முன்பு கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என்பதையும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu