மூடை மூடையாக போலி சான்றிதழ்கள்..!
சிதம்பரம் போலிச்சான்றிதழ் தயாரித்து கைதானவர்கள்.
போலிச் சான்றிதழ்கள் சாலையில் கிடந்ததைப் பார்த்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர், சிதம்பரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த 80க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை கைப்பற்றி அத்துடன் கிடந்த ஒரு ரசீதை கைப்பற்றினர்.
அந்த ரசீது யார் பெயரில் உள்ளது என பார்த்தபோது சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்சிதர் சங்கர் என்பவர் பெயரில் இருப்பது தெரிய வந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது அவருடன் நாகப்பன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரையும் போலீசார் இரவு முழுவதும் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மேலும் ஒருவருக்கு போலி சான்றிதழ் தயாரிப்பில் சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.
மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், கேரளா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகம், தமிழகத்தில் உள்ள பாரதிதாசன் யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக சான்றிதழ்கள் மற்றும் பள்ளிகளுக்கான போலி சான்றிதழ்கள் என இதுவரைக்கும் 5000 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மாணவர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், லேப்டாப், போலி சான்றிதழ்களை பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான பிரின்டர், அவர்கள் பயன்படுத்திய செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் தயாரித்து கைவசம் வைத்துள்ளதாகவும், போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் வாழ்க்கையில் போலி சான்றிதழ் மூலம் விளையாடி வந்த மிகப்பெரிய மாஃபியா கும்பல் தற்போது சிதம்பரத்தில் சிக்கி உள்ளது. இதில் முக்கிய புள்ளிகள் உடந்தையாக இருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu