ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார செயலாளர் வேண்டுகோள்

ஒரு மாதத்திற்குள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதார  செயலாளர் வேண்டுகோள்
X

சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் நலவாழ்வு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 3வது கட்டமாக நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை ஒட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. 3வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நாளை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 20,000 முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரத்ததான முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், 'சென்னையில் மட்டும் 1600 முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி கையிருப்பை அதிகப்படுத்தும் வகையில் திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் சுமார் 22 லட்சம் பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர்.நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

லட்சங்களில் இருந்து தமிழகத்தில் கொரோனா தொற்று ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். 1500 என இருந்து வந்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்திருப்பது கவலை அளிக்கிறது. நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது, முகக்கவசங்களை முறையாக அணியாதது போன்றவற்றால் தொற்று அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்த உடனே கால தாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றார்.

Tags

Next Story