நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும்: அரசுக்கு ஈஸ்வரன் எம்எல்ஏ கோரிக்கை
ஈஸ்வரன்
இது குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான இ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நூல் விலை உயர்வினால் தொடர்ந்து ஜவுளித்துறை பாதிப்படைந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக துணி உற்பத்தியாளர்கள் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க முன்வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் விசைத்தறியாளர்கள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உயர்த்தப்பட்ட விலையில் நூலை வாங்கி ஏற்றுமதிக்கான ஆயத்த ஆடைகளை தயாரிக்க முடியாமல் ஏற்றுமதியாளர்கள் தடுமாறுகின்றனர். அதனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியவில்லை. வேறு வழியில்லாமல் வாடிக்கையாளர்கள் அண்டை நாடுகளாக பங்காளதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளில் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்கின்றனர்.
நூல் விலை கடும் உயர்வால், வரும் காலத்தில் மிக மோசமான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். இது குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் கொடுத்துள்ளேன். தமிழக முதலமைச்சர் 2 முறை விளக்கமாக கடிதம் எழுதி உள்ளார். தொழில்துறையின் சார்பாக தொடர்ந்து உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லி வருகிறாõர்கள்.இருந்தும் மத்திய அரசு நூல் விலை உயர்வு குறித்து கவலைப்படவில்லை.
இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலர் மதிப்பு அதிகமாக இருப்பதால், ஏற்றுமதி அளவு அதிகமானது போல ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. இதுபோன்ற தரவுகளை வெளியிட்டு, மத்திய அரசு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதார்த்தத்தில் இந்திய ஜவுளித்துறை அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இன்னும் தாமதிக்காமல் மாநில ஜவுளித்துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி, மத்திய ஜவுளித் துறை அமைச்சரை சந்தித்து நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu