பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு

பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்: போலீஸ் குவிப்பு
X

பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீஸாார் குவிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடைக்கு மக்கள் எதிர்ப்பு

பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் போலீஸார் குவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் 29 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. தமிழக-கர்நாடக இடையே சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாலை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் இருமார்க்கத்திலும் வந்து செல்கிறது.

இந்த சாலையில் செல்லும் வாகனங்களால் ரோட்டை கடக்கும் வன விலங்குகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தது. இதையடுத்து சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.

ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவை வியாழக்கிழமை முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இரவு நேர வாகன போக்குவரத்து நிறுத்தம் காரணமாக தாளவாடி தாலுகாவில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் இந்த பகுதியில் உற்பத்தியாகும் விலை பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

எனவே இந்த உத்தரவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பண்ணாரி சோதனை சாவடியை இன்று குடும்பத்துடன் முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். மேலும் ஓட்டுனர்கள், கடை வியாபாரிகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈரோட்டில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை கட்டாயம் அமல்படுத்தியே ஆக வேண்டும்.அதே நேரம் மலைப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்சணைக்கு தீர்வு காண விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால் போராட்டக் குழுவினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி பண்ணாரி சோதனை சாவடியில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி, இன்று காலை முதலே ஏராளமான மலை கிராம மக்கள், விவசாயிகள், வணிகர்கள், பண்ணாரி சோதனை சாவடி பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் காலை 10 மணி அளவில் அவர்கள் பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.மேலும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!