கோவிலுக்கு அரசியல் கட்சிகளின் தலையீடு – மக்கள் மனதில் குழப்பம்

கோவிலுக்கு அரசியல் கட்சிகளின் தலையீடு – மக்கள் மனதில் குழப்பம்
X
கோவிலில் ஜாதி-மத மோதல்? இருதரப்பு அரசியல் செல்வாக்கு கொண்டு கோவிலை பயன்படுத்துகிறது

கோவிலை மையப்படுத்தி மாறி மாறி மனு: இரு அரசியல் கட்சிகளால் மக்கள் குமுறல்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியின் ஒன்பதாவது வார்டில் அமைந்துள்ள அடுக்குபாறை சின்ன மாரியம்மன் கோவிலை மையப்படுத்தி இரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி போலீசில் மனு அளித்து வருவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முதல் புகார்

கிருஷ்ண நகர், குபேரன் நகர், ஆறுபடையான் நகர் மற்றும் அடுக்குபாறையைச் சேர்ந்த மக்கள் கடந்த மார்ச் 4-ஆம் தேதி வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், "மாநகர திமுக நெசவாளரணி துணை அமைப்பாளர் சண்முகம் அடுக்குபாறை சின்ன மாரியம்மன் கோவிலில் தினசரி மைக் செட் போடக்கூடாது. கோவிலில் வழிபாடு செய்யக்கூடாது. அவர் சுவாமி குறித்து தவறாக பேசி, ஜாதி-மத மோதல்களை உருவாக்கும் விதமாக பேசுகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.

எதிர் புகார்

இந்நிலையில் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் திரு. சண்முகம் நேற்று அளித்த எதிர் புகாரில், "கடந்த ஜனவரி 20-ஆம் தேதி ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கண்ணுபையன் (எ) கிருஷ்ணராஜ், கோவில் கும்பாபிஷேகம் என்று கூறி தடை செய்யப்பட்ட கூம்பு வடிவிலான ஒலிபெருக்கியை 24 மணி நேரமும் ஒலிக்க விட்டார். இது குறித்து கடந்த மார்ச் 2-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். மறுநாள் காவலர்களும் அங்கு வந்து பார்த்து கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றுமாறு கூறினர். ஆனாலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றவில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு, என் மீது தவறான புகார் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் அதிருப்தி

இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, "முன்னணி அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, காவல் நிலையத்தில் மாறி மாறி மனு கொடுத்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன முன்விரோதமோ தெரியவில்லை. தங்கள் செல்வாக்கை காட்டிக்கொள்ள இருதரப்பினரும் கோவிலை எதற்காகப் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவில்லை. காவல்துறையினர் எந்தவித பாரபட்சமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் கோவிலை அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பக்தர்களின் வழிபாட்டிற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story