ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தி.மு.க. தீவிர முன்னேற்பாடு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பணிகளை திமுக தீவிரமாக தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் 14ம் தேதி இளங்கோவன் மறைவையடுத்து, டிசம்பர் 18ல் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டில்லி தேர்தலுடன் இணைந்து இந்த தேர்தலும் நடைபெற உள்ளதால், திமுக முன்கூட்டியே தனது வேலைகளை துவங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் வார்டு மற்றும் பகுதி வாரியாக வாக்காளர் பட்டியலை கட்சி நிர்வாகிகள் மூலம் வீடு வீடாகச் சென்று சரிபார்த்துள்ளனர். மொத்த வாக்காளர்களின் விவரங்கள், ஆண்-பெண் வாக்காளர்கள், வெளியூரில் உள்ளவர்கள், அண்மையில் இறந்தவர்கள், இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டையில் உள்ள பெயர் விவரங்கள், அட்டை எண்களுடன் கூடிய பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் விவரங்களை தனியாக எடுத்து, அவர்களை இம்முறை கட்டாயம் வாக்களிக்க வைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 600 முதல் 1,100 வரை வாக்காளர்கள் உள்ள நிலையில், அவர்களில் 150 முதல் 400 பேர் வரை வாக்களிக்காமல் இருந்ததால், அவர்களை தொடர்ந்து அணுகுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதிமுக போட்டியிடுவதா இல்லையா என்பதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சாதகமான மற்றும் பாதகமான வார்டுகள், கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு குறைவான வாக்குகள் கிடைத்த வாக்குச்சாவடிகளின் விவரங்களும் தனித்தனியாக தொகுக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டவுடன் இந்த பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட்டு, வாக்காளர்களை வாக்குகளாக மாற்றும் பணி தீவிரப்படுத்தப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu