வரத்து குறைவு எதிரொலி:  ஈரோடு மார்க்கெட்டில் சதம் அடித்த காய்கறி விலை

வரத்து குறைவு எதிரொலி:  ஈரோடு மார்க்கெட்டில் சதம் அடித்த காய்கறி விலை
X

பைல் படம்.

ஈரோடு வ.உ.சி. மார்க்கெட்டில் கேரட், பீட்ரூட் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கவலையடைந்தனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்தது. இதன் எதிரொலியாக பல்வேறு காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் தக்காளி விலை கிலோ ரூ. 150 வரை விற்பனையானது.பல்வேறு நடவடிக்கை காரணமாக தக்காளி விலை குறைந்தது. இப்போது மற்ற காய்கறிகளின் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

ஈரோடு வ.உ.சி. காய்கறி பெரிய மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் வரத்தாகி வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் விலை உயர்ந்தது. தற்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் ஐய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்த வருகிறார்கள். இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு ஏற்ப விளைச்சல் இல்லாததால் வரத்து குறைந்து காய்கறிகள் விலை எகிறி உள்ளது. 2 நாட்கள் முன்பு ஒரு கிலோ கேரட், பீட்ரூட் ரூ.80- க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஒரு கிலோ கேரட், பீட்ரூட் ரூ.100 -க்கு விற்பனையாகிறது.

இதைப் போல் மற்ற காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:

கத்திரிக்காய் - ரூ.100, பீன்ஸ் - ரூ.50 முதல் ரூ.70, பீர்க்கங்காய் - ரூ.60, முட்டைக்கோஸ் - ரூ.50, வெண்டைக்காய் - ரூ.80, பச்சை மிளகாய் - ரூ.120, சுரைக்காய் - ரூ.30, பாவைக்காய்-ரூ.60, பட்ட அவரை, கருப்பு அவரை - ரூ.100, காலிபிளவர் - ரூ.40, சின்ன வெங்காயம் - ரூ.50, பெரிய வெங்காயம் - ரூ.70, தக்காளி 14 கிலோ சின்ன மூட்டை - ரூ.750, 26 கிலோ பெரிய மூட்டை - ரூ.1500, சில்லரை விற்பனையில் ஒரு கிலோ - ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. முருங்கைக்காய் கிலோ தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இன்று ஒரு கிலோ ரூ. 250 முதல் ரூ. 300 வரை விற்பனையானது. மற்ற வெளியிடங்களில் கடைகளில் சில்லறை விற்பனையில் காய்கறி விலை அதிகரித்துள்ளது. தொடர்ந்து காய்கறிகளின் விலை ஏற்றத்தால் சாதாரண நடுத்தர மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!