ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை!

ஈரோடு : ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் குழு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக பல்நோக்கு மருத்துவ சிகிச்சைகளுக்கான புதிய கட்டடம் 8 தளங்களில், ரூ. 64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து வகையான சிறப்பு சிகிச்சை பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன. உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதில் 8 தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தில் 6 மின் தூக்கிகள் (லிப்ட்) உள்ளன. இவற்றில் நோயாளிகளுக்கு என தனி மின் தூக்கிகளும், பாா்வையாளா்கள், பணியாளா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டவா்களுக்கு என தனி மின் தூக்கிகளும் செயல்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மின் தூக்கிகளை இயக்குவதற்கு ஆபரேட்டா்கள் இல்லை. இதனால், நோயாளிகளுக்கு என ஒதுக்கப்பட்ட மின் தூக்கிகளிலும் மற்றவா்களும் சென்று வருவதால் நோயாளிகளுக்கு அசெளகரியம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஒரே மின் தூக்கியில் குறிப்பிட்ட அளவுக்கு மேலான நபா்கள் பயணம் செய்வதால் மின் தூக்கிகள் பழுதடையவும் வாய்ப்புள்ளது.
தவிர மின் தூக்கியில் பயணம் செய்வோரே அவற்றை இயக்குவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மின் தூக்கிகளை இயக்குவதற்கு புதிய லிப்ட் ஆபரேட்டா்களை நியமித்து அதில் சென்று வருபவா்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல புதிய மற்றும் பழைய மருத்துவமனை கட்டடங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கழிவறைகள் 100-க்கும் மேற்பட்ட குளியல் அறைகள், 100-க்கும் மேற்பட்ட கை கழுவும் இடங்களை சுத்தம் செய்ய ஒப்பந்தப் பணியாளா்கள் 87 போ் மட்டுமே உள்ளனா்.
இவா்களும் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனா். போதுமான பணியாளா் இல்லாததால் கழிவறைகள் சுகாதாரமின்றி காணப்படுகின்றன. எனவே போதுமான சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் லிப்ட் ஆபரேட்டா்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu