மருந்தகங்களில் உபயோகிப்படும் கைப்பிடி இல்லாத காகித பை உற்பத்திக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை

ஈரோடு : மருந்தகங்களில் உபயோகிப்படும் கைப்பிடி இல்லாத காகித பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முழு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு தமிழ்நாடு பேப்பர் பை உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சென்னிமலை எஸ்.கே.ராமசாமி அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
18% ஜிஎஸ்டி வரி விதிப்பு
சிறு, குறு தொழில் தயாரிப்பான கைப் பிடி இல்லாத காகிதப்பைத் தொழிலுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டால் பாதிப்பு
கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு வகையான பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், கைப்பிடி இல்லாத காகிதப்பைகள் உபயோகம் முற்றிலும் தடைபட்டு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைப்பிடி இல்லாத காகித பை பயன்பாடு
கைப்பிடி இல்லாத காகிதப்பைகள் மருந்தகங்கள், உணவகங்கள், ஜவுளிக்கடைகள், பேக்கரி, பேன்சி ஸ்டோர் போன்ற நிறுவனங்களுக்கு விநியோகிக்கிறோம். காகிதப்பை உற்பத்திக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் தொழில் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்படுகிறோம்.
1995-96 இல் விற்பனை வரி
கடந்த 1995-1996 ஆம் ஆண்டில் காகிதப்பை தொழிலுக்கு விற்பனை வரி இருந்தது. இதனை குறைக்க கோரி அன்றைய முதல்வர் மு.கருணாநிதியிடம் கோரிக்கையை வைத்தோம்.
2000 ஆம் ஆண்டில் முழு வரி விலக்கு
காகிதப்பை தொழிலை கவனத்தில் கொண்டு கடந்த 2000- ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் காகிதப்பை தொழிலுக்கு முழுவரி விலக்கு அளித்து தொழிலைக் காப்பாற்றி உதவினார்.
2017 இல் 12%, 2021 இல் 18% ஜிஎஸ்டி
2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் காகிதப்பை தொழிலுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. 17.9.2021 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி. கவுன்சில் கூட்டத்தில் காகிதப்பைகளுக்கு ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
குறைந்த முதலீட்டில் சிறு தொழில்
குறைந்த முதலீட்டில், சிறு தொழிலாக செய்யப்படும் கைப்பிடி இல்லாத காகிதப்பை தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரியை முழுமையாக ரத்து செய்ய கேட்டுக் கொள்கிறோம்.
இது தொடர்பாக அடுத்து நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu