முகக்கவசம் அணியாமல் சுற்றும் பொதுமக்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பைல் படம்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2 -வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ் அதிகாரிகள் தாக்கியது. இதேபோல் குழந்தைகள் இளைஞர்கள் முதியவர்களையும் தாக்கியது. இதில் முதியவர்கள் பெரும்பாலானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.
பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை முழுநேர கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முககவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதே போல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதார துறையினர் வலியுறுத்தினர். ஆனால் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வந்தனர். இந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் , மாநகராட்சி, வருவாய் துறையினர், சுகாதாரத் துறையினர், போலீசார் ஒருங்கிணைந்து முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகள் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் முக கவசம் அணிய தொடங்கினர். பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். இதையடுத்து கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதும் மக்கள் மீண்டும் முககவசம் அணியும் பழக்கத்தை கைவிட்டனர். இந்நிலையில் மீண்டும் உலகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தி வருகிறது. உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியது. இந்தியாவிலும் ஊடுருவி தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 400 -ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் இதன் பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலருக்கு இதன் அறிகுறிகள் உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினர் உஷார் படுத்தப்பட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 280 பேர் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் சர்வசாதாரணமாக முககவசம் இன்றி நடமாடி வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் பெரும்பாலான பயணிகள் முககவசம் அணிந்து வருவதில்லை. இதேபோல் சில பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களும் முக கவசம் அணிவது இல்லை. பொதுமக்கள் அதிகம் கூடும் காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகளிலும் பெரும்பாலும் மக்கள் முக கவசம் இன்றி வருகின்றனர். சிலர் தங்களது குடும்பத்தினருடன் சிறு குழந்தைகளையும் முக கவசம் இன்றி அழைத்து வருகின்றனர். இதைப்போல் பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது புத்தாண்டு பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகை வர உள்ளதால் பொதுமக்கள் கடைவீதிகளில் இப்போதே குவிய தொடங்கியுள்ளனர். கொரோனாவை பொறுத்தவரை மக்கள் அலட்சியமாக இருக்காமல் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இதை பெரும்பாலான மக்கள் காதில் வாங்கிக் கொள்வதாக தெரியவில்லை. எனவே முக கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவ்வப்போது திடீர் சோதனை மேற்கொண்டு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu