அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே வார்டு அமைக்கப்பட உள்ளதாக, தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஈரோட்டில் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்திற்கு நாளை வருகிறார். இதையொட்டி, பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர், இன்று ஆய்வு செய்தனர்.

பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழக முதல்வர் நாளை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார். 95 லட்சம் தடுப்பூசிகளில் 82 லட்சம் தடுப்பூசிகள், பொதுமக்களுக்கு போடப்பட்டு, இன்னும் 6 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பு உள்ளது. அதுவும் 3 நாட்களுக்கு மட்டுமே வரும் .

மேலும் 18 வயது முதல் 44 வயதினருக்கான தடுப்பூசிக்கு தமிழக அரசு 85 ரூபாய் கோடி செலுத்தி 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசி வந்துள்ளது. இன்னும் 12 லட்சம் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது. அது வந்தவுடன் அனைத்து இடங்களுக்கும் பிரித்து தரப்படும் . தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற காரணத்தால் தான் 3.5 கோடி தடுப்பூசிக்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. அந்த பணி ஜூன் 4 ம் தேதி முடிவுற்று ஜூன் 5 ம் தேதி திறக்கப்படும்.

தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி பெற டெல்லியில் டி.ஆர்பாலு முகாமிட்டு உள்ளார்.10 ஆண்டுகளாக செயல்படாத செங்கல்பட்டு ஹெச்.எல்.எல்.தடுப்பூசி மையத்தை திறக்க மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றோம். கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை காத்திருக்க வைக்கக்கூடாது என்பதற்காக, அனைத்து மருத்துவமனைகளிலும் ஜீரோ டிலே (பூஜ்ஜிய தாமதம்) வார்டு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story