ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணிகள்..!

ஆமை வேகத்தில் நடைபெறும் சாலைப் பணிகள்..!
X
பெருந்துறை பழைய பஸ் நிலைய சாலைகளை புதுப்பிக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை நகரின் பிரதான சாலைகளில் ஒன்றான, பழைய பஸ் நிலைய சாலை என்று அழைக்கப்படும், காவல் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரையான சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒப்பந்தக் காலம் முடிந்து பலமாதங்களுக்கு மேலாகியும் நிறைவடையாததால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்ந சாலையையொட்டி அரசு மருத்துவமனை, காவல் நிலையம், அரசுப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், போன்ற முக்கிய அலுவலகங்களும், தினசரி மார்க்கெட்டும் அமைந்துள்ளன.

பெருந்துறை ரயில் நிலையம் மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பாதையும் இதனையொட்டி அமைந்துள்ளது. மேலும், பெருந்துறை நால்ரோடு அருகில் சாலைகள் குறுகலாக இருப்பதால் ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இச்சாலையில் தான் சென்று வருகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையை புதுப்பித்து சாக்கடை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கடந்த ஆண்டு மே மாதம் 4 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு நெடுஞ்சாலை துறை மூலம் தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்தப்படி ஆறுமாத காலத்தில் இப்பணிகளை முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பணிகள் தாமதமாக துவங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இச்சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக இவ்வழியே செல்லும் குடிநீர் பைப் லைன்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள பல குடும்பங்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைதுறை உடனடியாக தலையிட்டு, சாலை புதுப்பித்தல் மற்றும் சாக்கடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story