சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 18 ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்
பைல் படம்
சென்னிமலை முருகன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளது.
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் இந்த ஆண்டு சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 15-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. பின்னர் அன்று இரவு கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 16-ந் தேதி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17-ந் தேதி இரவு 7 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கிழக்கு ராஜ வீதியில் இருந்து தேர் வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி மற்றும் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து நிலை சேர்க்கப்படுகிறது.
19-ந் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 20-ந் தேதி காலை 8 மணிக்கு மகா தரிசனமும், இரவு 8 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மு.அன்னக்கொடி, கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், செயல் அலுவலர் மு.ரமணிகாந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu