சார், எங்க ஊரு கோவிலை காணோம் : வடிவேலு படப்பாணியில் போஸ்டரால் பரபரப்பு
திரைப்படம் ஒன்றி, நடிகர் வடிவேலு கிணறு காணவில்லை என்று கூறி போலீசாரை அலைய விடும் காட்சி, பொதுமக்களால் ரசிக்கப்பட்டது. இதைப்போல் நம்ப முடியாத சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடந்துள்ளது.
ஆனால், இம்முறை காணாமல் போனது கிணறு இல்லை, கோவில். காணாமல் போன கோவிலை மீட்டுத்தர வலியுறுத்தியும், கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தங்க சன்மானம் வழங்கப்படும் எனவும், பாரதிய ஜனதா பிரமுகர் ஒருவர், பெருந்துறை நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர், பெருந்துறை அடுத்த பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவ பட்டக்காரன் சசிதயாள். இவர் பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளராக உள்ளார்.
பெருந்துறை தாசில்தார் கார்த்திக்கை சந்தித்து, சசிதயாள் ஒரு மனு அளித்தார். அதில், பெருந்துறை அடுத்த சீனாபுரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிவன் கோவில் இருந்து வந்தது. இந்த கோவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். ஆனால், இந்த கோவில் திடீரென காணவில்லை; அங்கிருந்த சாமி சிலைகளையும் காணவில்லை. விசாரணை மேற்கொண்டு காணாமல் போன சிலைகளையும், கோவிலையும் மீட்டுத்தர வேண்டும் என்று, அதில் கூறியிருந்தார்.
அத்துடன் நிற்காமல், இன்று பெருந்துறை பகுதி முழுவதும், பழமை வாய்ந்த சீனாபுரம் சிவன் கோவிலை காணவில்லை. கோவிலை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று, சசிதயாள் தரப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. பெருந்துறை பகுதி மக்கள், இதை ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu