திமுகவில்தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அறிக்கை…

திமுகவில்தான் இருக்கிறேன்.. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அறிக்கை…
X

முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம். (கோப்பு படம்).

ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் தான் இருக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்துறை அமைச்சராக சில ஆண்டுகள் இருந்தார். மேலும், பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பெருந்துறை தொகுதியில் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், அந்தத் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார்.

இருப்பினும், சுயேச்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலம் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்றார். இதனால், அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் ஐக்கியமானார்.

தொடர்ந்து, பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வந்தார். தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இணைந்து போதிலும் அவருக்கு பெரிய அளவிலான பதவி ஏதும் வழங்கப்படவில்லை.

இதனால், கட்சியில் செயல்பாடுகளில் இருந்து கடந்த சில மாதங்களாகவே தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்து வருகிறார். இதனால், திமுகவில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தோப்பு வெங்கடாச்சலம் இணைய போவதாக தகவல் பரவியது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இந்தத் தகவல் குறித்து தோப்பு வெங்கடாச்சலம் தற்போது பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பெருந்துறை தொகுதி முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக சில ஊடகங்களில் செய்தி வந்துள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறான ஒரு செய்தி. தற்போது வரை நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது லட்டர்பேடில் அறிக்கையை முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!