ஈரோடு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 300 படுக்கை வசதி!

பெருந்துறையில் உள்ள, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகளை, வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோட்டில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பெருந்துறையில் உள்ள அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை, முழுமையாக கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இங்கு, ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 550 படுக்கைகளும் நிரம்பின. இதனையடுத்து கடந்த ஒரு வாரத்தில் புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டது. வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, அவற்றை இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கை வசதி, இன்று பயன்பாட்டுக்கு வந்தது. மேலும் 800 ஆக்சிஜன் படுக்கைகள் விரைவில் அமைக்கப்பட உள்ளது. அதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்து, அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது