விஜயமங்கலம் அருகே கார் மோதி 3 பேர் பலி; 3 பேர் படுகாயம்

விஜயமங்கலம் அருகே, தொழிலாளர்கள் மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம் ஈஸ்வரன் கோவில் அருகே, இன்று காலை இறைச்சிக் கடைகளில் இருந்து கோழிக் கழிவுகளை ஏற்றிச் செல்வதற்காக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. கோழிகழிவுகளை ஏற்றும் பணியில், 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூரில் இருந்து பெருந்துறை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று, ஈஸ்வரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது; அந்த கார் சாலையோரத்தில் லாரியில் கோழிக் கழிவுகளை ஏற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில், அங்கு பணியிலிருந்த சின்னராசு, முத்தான் மற்றும் கிட்டான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ராம்குமார், செந்தில்குமார் மற்றும் சின்னான் ஆகியோர் படுகாயமடைந்தனர். ஆனால் காரில் வந்தவர்கள் யாருக்கும் எவ்விதக் காயமும் ஏற்படவில்லை.

தகவலறிந்த பெருந்துறை போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 தொழிலாளர்களையும் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!