சென்னிமலை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சென்னிமலை: ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம்
X
சென்னிமலை முருகன் கோவிலில் நடைபெற்ற மகா தரிசன விழாவில், இரவு 7 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணியசாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச தேர் திருவிழா தொடங்கியது. பின்னர் தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் 28-ந் தேதி காலை நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். மறுநாள் மாலையில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு நிலை சேர்க்கப்பட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.. தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் இன்று நடைபெற்றது. இதையட்டி காலை 10 மணி முதல் கைலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சாமிக்கு ஒரு டன் அளவிலான மலர்களுடன், 16 வகையான திரவியங்கள் மற்றும் 16 வகையான கனிகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 7 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணியசாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவில் காவடி பக்தர்தர்கள் வந்திருந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மகா தரிசன தினத்தன்று இரவு 8 மணிக்கு மேல் சாமி புறப்பாடு நடைபெற்று விடிய, விடிய 4 ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் அழைத்து செல்லப்படும். ஆனால் இந்த ஆண்டு சாமி ஊர்வலம் புறப்பட்ட சில மணி நேரங்களில் சாமிகளை கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டது. தேர்த்திருவிழா நாட்களில் சுமார் 10 நாட்களுக்கு மேல் சென்னிமலையில் ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இதற்காகவே கிராம புறங்களில் இருந்து பொதுமக்கள் வருவதுண்டு.

இந்த ஆண்டு தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் ஆங்காங்கே தற்காலிக கடைகளை அமைத்திருந்தனர். அப்போது பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்று கலெக்டரின் உத்தரவை காட்டி கடைகளை அப்புறப்படுத்தினார்கள். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!