தைப்பூச தேரோட்டத்துக்கு அனுமதி
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச தேரோட்டம், மகா தரிசன விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடக்கும். இந்தாண்டு கரோனா பரவலால் இந்த விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இந்நிகழ்ச்சிகளை வழிகாட்டு நெறிமுறைப்படி நடத்த வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள், கிராம மக்கள், மண்டகப்படிதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி19) கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடந்தது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, கோட்டாட்சியர் எஸ்.சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னகொடி, பக்தர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்ட முடிவு குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தேரோட்டம், மகா தரிசனம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முகக் கவசம் அணிதல், குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்பது, மண்டகப்படி நிகழ்ச்சியில் 50-க்கும் குறைவானவர்களே பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேரோட்ட விழாவை தொடர்ந்து நடக்கும் 15 நாள் நிகழ்ச்சியை 5 நாளில் முடித்துக்கொள்வது, 3 தேர் செல்வதற்கு பதில் ஒரே தேரில் பவனி நடத்துவது, வழக்கம்போல சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி போன்றவை நடத்தக்கூடாது. தேரோட்டத்தை வரும் 28 அல்து 29 ஆம் தேதி நிறைவு செய்து நிலைக்கு கொண்டு வரவும், பக்தர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது குறித்தும் ஆலோசித்து முடிவு செய்யவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நடக்க இருந்த உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை திரும்பப் பெறுவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu