கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகளில் பெரும் தீ விபத்து
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்.
ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சத்தி ரோடு பகுதியில் மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த ராமச்சந்திரன்(57) என்பவருக்கு சொந்தமான ராமு அன்ட் பழனியப்பா கவுண்டர் அன்கோ, ராமு அன்ட் கோ மற்றும் ஈரோடு வீரப்பன் சத்திரம் பாரதிதாசன் வீதியை சேர்ந்த ஸ்ரீதர்(47) என்பவருக்கு சொந்தமான ராணி அன்ட் கோ என்ற கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடோன் உள்ளது.
இந்த கடைகளில் கட்டுமானத்திற்கு தேவையான டைல்ஸ், பெயிண்ட், கதவுகள், ஜன்னல்கள், மின் இணைப்புக்கு பயன்படும் பொருட்கள், குளியலறை-கழிப்பறை வடிவமைப்பு பொருட்கள், பிளாஸ்டிக் குழாய்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளில் நேற்று இரவு விற்பனை முடிந்த பிறகு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து கரும்புகை வெளிவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அடுத்தடுத்த கடைகளில் தீ பரவி மளமளவென பற்றி எரிய தொடங்கியது. 15 அடி உயரத்திற்கு பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தது. கட்டுமான பொருட்களின் கடைகளின் கதவுகளை உடைத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. தனியார் வாகனங்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வரப்பட்டும், பவானி, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கூடுதலாக 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் அசாம்பாவித சம்பவங்களை தடுக்க ஈரோடு டவுன் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இந்த தீ விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டிருந்ததால் அவர்களை மீட்க 108 ஆம்புலன்சு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்ட கடைகளுக்கு அருகில் மர சமான்கள் செய்யும் கடைகளிலும் தீ பரவியதால், அப்பகுதியிலும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் 2 மரக்கடைகளிலும் இருந்த மரங்கள், மரச்சமான் செய்ய வைத்திருந்த உபகரணங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி அதிகாலை வரை தொடர்ந்தது. அதிகாலை 5 மணியளவில் தீயை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.2.50கோடி மதிப்பிலான கட்டுமான பொருட்கள் மற்றும் அலுவலக தளவாட பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu