வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை அதிகரிப்பால் விலை உயர்வு..! மரவள்ளி விலை தரைமட்டம்!

வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை அதிகரிப்பால் விலை உயர்வு..! மரவள்ளி விலை தரைமட்டம்!
X
சிவராத்திரியை முன்னிட்டு, வடமாநிலங்களில் ஜவ்வரிசி தேவை அதிகரிப்பால் அதன் விலை உயர்ந்துள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து மரவள்ளி கொள்முதல் செய்வதால், விலை தரைமட்டமாகி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஈரோடு : சேலம், குரங்குச்சாவடியில் உள்ள சேகோசர்வில், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்-களில் இருந்து ஜவ்வரிசி(சேகோ), ஸ்டார்ச் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக வடமாநில வியாபாரிகள் வந்து, ஜவ்வரிசி வாங்குவதால், அதன் விலை உயர்ந்துள்ளது.

சேகோ ஆலை உரிமையாளர்களின் நிலைப்பாடு

கடந்த மாதம் பண்டிகையின்றி, ஜவ்வரிசி தேவை குறைந்து விலை வீழ்ச்சி அடைந்தது. 25 சதவீத ஆலைகளில் உற்பத்தி நடக்கவில்லை. மழையால் ஸ்டார்ச் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. 2 லட்சம் ஜவ்வரிசி மூட்டைகள் தேக்கம் அடைந்தன. வரும் பிப்., 26ல் மஹா சிவராத்திரி கொண்டாடப்படும். அந்த நாளில் மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசதம், குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் விரதம் இருப்பர். அப்போது அவர்கள், ஜவ்வரிசியை அதிகம் வாங்கி பயன்படுத்துவர். இதனால் தேவை அதிகரித்து விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஆலைகளிலும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பரில் ஜவ்வரிசி மூட்டை(90 கிலோ), 3,400 முதல், 3,500 ரூபாய் வரை விற்றது. தற்போது, 3,750 முதல், 3,850 ரூபாய் வரை விற்பனையாகிறது. ஸ்டார்ச் மூட்டை, 2,400 முதல், 2,800 ரூபாய் வரை விற்றது. தற்போது, 2,850 முதல், 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தினமும், 5,000 ஜவ்வரிசி மூட்டைகள் விற்கப்படுகின்றன. பண்டிகை நெருங்கும்போது தினமும், 10,000 முதல், 15,000 ஜவ்வரிசி மூட்டைகள் விற்கும்; மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

மரவள்ளி விவசாயிகளின் அவல நிலை

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில், 5,000 ஏக்கரில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடை பணி நடந்து வருகிறது. அறுவடை செய்த பின், சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள சேகோ ஆலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்தாண்டு இதே சீசனில், மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு, 12 ஆயிரம் ரூபாய் முதல், 14 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது. ஆனால், தற்போது டன்னுக்கு, 6,000 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கிறது. வியாபாரிகள், 'சிண்டிகேட்' அமைத்து விலை நிர்ணயம் செய்வதால், மரவள்ளிக்கு நல்ல விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஏக்கருக்கு, 15 டன் வரை விளைச்சல் கிடைத்த நிலையில், இந்த ஆண்டு, 10 டன் வரை மட்டுமே விளைச்சல் கிடைத்துள்ளதாவும், விலை வீழ்ச்சி காரணமாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என, மரவள்ளி பயிரிட்ட விவசாயிகள் கூறினர். மரவள்ளி சாகுபடி செய்ய ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஏக்கருக்கு அதிகபட்சம், 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும். மரவள்ளி கிழங்கு டன் ஒன்றுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை கிடைத்தால் மட்டுமே கட்டுப்படியாகும். தற்போது, 6,000 ரூபாய் விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்